/* */

கர்நாடகம் மேகதாதுவில் அணைகட்ட தீவிரம்..! வாருங்கள்.. நாம் சினிமா தியேட்டரில் கைதட்டி விசிலடிப்போம்..!

மறுபடியும் மேகதாது பிரச்னை பெரிதாக கிளம்புகின்றது. ஆகஸ்ட் இருபத்தி மூன்றாம் தேதி இதற்காக கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது.

HIGHLIGHTS

கர்நாடகம் மேகதாதுவில் அணைகட்ட தீவிரம்..! வாருங்கள்.. நாம் சினிமா தியேட்டரில் கைதட்டி விசிலடிப்போம்..!
X

மேகதாது (ஆடு தாண்டும் காவிரியின் ஆற்றுப்பகுதி)-(கோப்பு படம்)

Karnataka stands firm on dam construction in mekedatu

மேகதாது என்பது வேறொன்றுமல்ல, காவேரி கன்னடத்தின் ஒரு சில இடங்களில் ஒடுங்கலாக வரும். அதை ஆடு கூட தாண்டிவிடும், அந்த ஆடுதாண்டும் இடம்தான் கன்னடத்தில் மேக்க தாட்டு அல்லது மேகதாது என்று அழைக்கப்படுகிறது. காவேரியில் பல அணைகள் என்பது அக்காலத்தில் இல்லை. தஞ்சை தரணியில் காவேரியால் பயிர் அழிந்தால் மைசூர் சமஸ்தானத்திடம் நஷ்ட ஈடு கேட்பது வழமையாயிற்று, அதாவது உங்கள் நாட்டு வெள்ளம் எங்கள் பயிரை அழித்தது எனும் நஷ்ட ஈடு இது.

வெள்ளையன் இதை இன்னும் கூர்மைப்படுத்தினான். மிகப்பெரும் தொகையினை மைசூர் சமஸ்தானம் ஆண்டுதோறும் நஷ்ட ஈடாக வழங்கிய நிலையில்தான் மைசூர் அரசின் திவானும், கர்நாடக சிற்பியுமான விஸ்வேசரய்யர் அணைக்கட்டும் திட்டத்தை முன்மொழிந்தார்.

கிருஷ்ணராஜ சாகர் அணை

அதன்படி கிருஷ்ணராஜசாகர் கர்நாடகத்துக்கு, மேட்டூர் தமிழ்நாட்டுக்கும் கட்டப்பட்டது. காவேரி கிருஷ்ணராஜ சாகருக்கு திசைமாறியது இப்படித்தான். கர்நாடகம் செழிக்க ஆரம்பித்தது. ஆனால் கிருஷ்ணராஜசாகரை விட மேட்டூர் அணைதான் பெரிது என்பதால் டெல்டாவுக்கு சிக்கல் இல்லை. இந்நிலை 1967 வரை சரியாக இருந்தது. காரணம் தமிழகத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ் இருந்தது. இருமாநிலத்திலும் டெல்லியிலும் அது வலுவாக இருந்தது

1967ல் காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் (அதாவது பக்தவக்சலம் ஆட்சி) இல்லாமல் போனது. தென்னிந்தியாவில் அரசியல் மாறிற்று. தேசமே தமிழகத்தை வேறுமாதிரி குறித்துக்கொண்டது.

திராவிட நாடு, திராவிட சித்தாந்தம் என அந்த இயக்கம் வளர்ந்து ஆட்சியை பிடித்தாலும் மலையாளி மலையாளிதான், தெலுங்கர் தெலுங்கர்தான், கன்னடர் கன்னடர்தான். அவர்கள் அப்படித்தான் இருந்தார்கள்.இனிமேலும் அப்படித்தான் இருப்பார்கள்.

திராவிட சித்தாந்தம் அவர்களைக் கவரவில்லை. நாத்திகவாதமும் இல்லை. இந்திக்கு எதிரானவர்களாகவும் அவர்கள் இல்லை. ஆனால், தங்கள் தாய்மொழியை அழியவிடவும் இல்லை.

தமிழன் ஒரு மாயையினால் கட்டப்பட்டான். மேடைப் பேச்சிலும், வசனத்திலும் அவன் மனம் லயித்துக்கிடந்தது. திரைப்படம் அந்த கனவினை இன்னும் கூட்டிற்று,

அதில் விவசாயி,மீனவன்,படகோட்டுபவன், மரம் வெட்டும் அடிமை, ரிக்ஷா இழுக்கும் தொழிலாளி என எல்லோரும் வாழ்வாங்கு வாழ்ந்தனர். அந்தக் கனவே உண்மை என நம்பினார்கள். தமிழ் அதில் முடிசூடா ராணியாக வாழ்ந்தது. பொற்கால வாழ்வை சினிமா மட்டுமே தரும் என்பது தமிழனின் ஆணித்தரமான நம்பிக்கை.

இதில் கொடுமை என்னவெனில் அந்த நம்பிக்கையை, அந்தக் கனவினை இன்னும் அவர்கள் விடவில்லை. இனியும் விடமாட்டார்கள் போலுள்ளது. மலையாள நடிகர் மம்மூட்டி மிக அழகாக தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்து கூறும்போது," தமிழர்கள் தங்களின் முதலமைச்சர்களை திரையில் தேடுகிறார்கள்" என்றார். எவ்வளவு உண்மை?

ஆனால், மற்ற முன்னாள் திராவிட மாநிலங்கள் அப்படி அல்ல. சினிமா வேறு(சிரஞ்சீவியின் அரசியல் தோல்வியோடு ஆந்திரம் திருந்திற்று), கட்சிவேறு, ஆட்சிவேறு, மாநில நலன் வேறு என்பதில் படுகவனமாக இருந்தனர். அதனால்தான் கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் அவர்களின் அபிமான நடிகனாக மட்டும் இருந்தார். கேரள சூப்பர் ஸ்டார்கள் டெப்பாசிட் கூட கிட்டாமல் அல்லாடினர். இன்னும் ஏராள உதாரணங்கள் உள்ளன.

Karnataka stands firm on dam construction in mekedatu

ஆனால் தமிழகத்தில் முளைவிட்ட நடிகர்களுக்கு எல்லாம் கோட்டைக் கனவு. கூடவே பிரதமர் கனவும் வருகின்றதாம். இப்படியாக தமிழகம் திக்கித் திணற, கேரளம்,கர்நாடகம்,ஆந்திரம் எல்லாம் டெல்லி ஆளும்கட்சிக்கு (தேசிய கட்சிகளுக்கு) எம்.பிக்களை அனுப்பி தங்கள் மாநில நலனை காத்துக் கொண்டனர், தேசிய நலத் திட்டங்களும் ஆதரவும் அள்ளிக் கிடைத்தன.

அதனால்தான் சென்னை மாநில தலைநகராக இருந்தபொழுது 50 வருடத்திற்கு முன் அடையாளமில்லா பெங்களூர்,ஐதராபாத் நகரம் எல்லாம் ராக்கெட் வேகத்தில் வளர, தமிழகம் மகா மோசமானது.

தேசிய கட்சிகளுக்கு வாய்ப்பில்லாத தமிழகம் நிதி சிக்கலில் மாட்ட , கள்ளுக் கடைகள் திறக்கப் பட்டன (அரிசி வழங்கவாம்) , சுயநிதி கல்லூரி,சுயநிதி மருத்துவமனை என ஏகபட்ட சுயநிதிகள் வந்தன, இன்னும் வரும். சுயநிதி சுடுகாட்டுக்கும் வழிகாட்டும். டாஸ்மாக் அந்த கடமையை செவ்வனே செய்து வருகிறது.

எப்பொழுதாவது டெல்லி கூட்டணி ஆட்சியில் பங்கு கிடைத்தால், அதிலும் ஊழல். பின்னர் தமிழகத்தை எப்படி டெல்லி மதிக்கும்?, இவர்களின் குரல் எப்படி எடுபடும்?

1970களில் இருந்தே தமிழகம் தடுமாறத் தொடங்க, காவேரியின் துணையாறான கபினியில் முதல் அணையைக் கட்டியது கர்நாடகம். பெரும் எதிர்ப்பு இல்லை.அந்த காலகட்டத்தில் சினிமாவில் அரசியல் தலைவர்களைத் தேடிக்கொண்டிருந்தது, தமிழகம்.

தொடர்ந்து ஹேமாவதி, சம்சா,ஹன்னுல்,லக்ஷ்மன் தீர்த்தா என சகல ஆறுகளிலும் தொடர்ந்து அணைகட்டி கொண்டேஇருந்தது, கிட்டதட்ட 30 அணைகள் இன்று கர்நாடகாவில் உள்ளன.

அன்றே சில குரல்கள் சினந்து எழுந்தன. அவர்கள் எவ்வளவு அணையும் கட்டட்டும், நமக்கு உரிய நீரை கொடுத்துவிட்டால் பிரச்னை இல்லை" அன்றைய தமிழக அரசு சொன்னது.

எவ்வளவு தீர்க்கதரிசனமான பதில்? அணைகட்டி விளைநிலங்களை பெருக்கினால் பயிர்களை காயவிட்டு நமக்கு தண்ணீர் தருவார்களாம். அவ்வளவு நல்லவர்களாம் கன்னடர்கள். ஒரு வழியாக தஞ்சை தரணி சுருங்க, தமிழகம் விழித்துகொண்ட பொழுது நிலைமை கைமீறிச் சென்றது.

நீங்கள் மட்டும் காவேரியின் துணையாறுகளான பவானி,அமராவதி,நொய்யலில் எல்லாம் அணை கட்டவில்லையா? நாங்களும் இங்கு அதனைத்தான் கட்டுகின்றோம் என அதிரடியான பதிலைக் கூறுகிறது கர்நாடகம். இன்றைய அவர்களின் நிலைப்பாடு மகா தந்திரமானது, காவேரியை பற்றித்தான் பேசவேண்டுமே தவிர, துணையாறுகளை பற்றி அல்ல என்கிறது. காவேரி நல்ல நீர்வள நதிதான். ஆனால் துணையாறுகள் இல்லாமல் காவேரி பெரும் ஆறாக மாறிவிடுமா? அது ஒக்கேனக்கலில் பரிசல் ஓட்டக்கூட காணாது. கிட்டத்தட்ட 40 வருடமாக தீவிரமாக நடக்கும் பிரச்னை இது. நாம் தியேட்டரில் விசில் நடித்துக்கொண்டிருந்த நேரங்களில் எல்லாம் கர்நாடக மக்கள் விளைநிலங்களில் வேலைசெய்து வளம் பெருக்கினார்கள். பெருக்கியாயிற்று, இனி தரிசாக்குவார்களா? அவர்கள் என்ன தமிழர்களா?

கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அமைச்சர்கள் டெல்லியில் இருந்தார்கள், யார் பேசினார்கள்? அல்லது என்னதான் செய்தார்கள்? சி.பி.ஐ அதிகாரிகள்தான் இதனை சொல்லமுடியும். காவேரி ஆணையமும், உச்சநீதிமன்ற தீர்ப்பும் இன்னும் செயலுக்கு வரமுடியாதபடி டெல்லியில் லாபி செய்கிறது கர்நாடகம்.

கர்நாடகம் தண்ணீர் விடவில்லை, சரி. வருணபகவான் புண்ணியத்தில் கரைபுரண்டபொழுது தமிழகம் வந்தது என்ன கரும்புகையா? தண்ணீர்தான். மேட்டூரைத் தாண்டி எங்கே பெரிய அணை இருக்கிறது? கல்லணை நீரை திருப்புமே ஒழிய சேமிக்காது. மழைகாலத்தில் கிட்டதட்ட 90 டிஎம்சி நீரை கடலுக்கு விட்ட தமிழகம்தான், அதன் பின் 20 டிஎம்சி தண்ணீருக்கு மல்லுக்கு நிற்கின்றது.

தமிழக நீர் மேலாண்மை அவ்வளவு மோசமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் நமக்கு கிடைக்கின்ற மழை நீரை சேமித்தாலே நாம் தண்ணீருக்காக பிறரிடம் கையேந்தத் தேவையில்லை. மழைக் காலத்தில் மழைநீரை முறையாக சேமிப்பதற்கு அணையைக்கட்டுங்கள். அதற்கு ஒரு முறையான வல்லுநர் குழுவை அமைத்து நீர் ஆதாரங்களை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம், மழைநீர் அறுவடைக்கான எலி முறைகள் என்ன? எங்கெல்லாம் மழை நீரை அறுவடை செய்யமுடியும்? எங்கு அணைகளைக்கட்டமுடியும்? என்று ஆய்வு செய்யுங்கள்.

Karnataka stands firm on dam construction in mekedatu

கபினி அணை (படம் - நன்றி விக்கிபீடியா)

ஒவ்வொரு சொட்டு மழை நீரும் வீணாக போகக் கூடாது என்பதில் மலையாளி, தெலுங்கர்,கன்னடர் மனநிலை ஒரேமாதியாக இருக்கும்போது தண்ணீருக்காகவே இலக்கணம் படைத்த தமிழருக்கு அந்த எண்ணம் இருக்கவேண்டாமா? காமராஜர் கட்டிய அணைகளில் தொலைநோக்கு இருந்தது. நீர் மேலாண்மை தெரிந்த தமிழருக்கு நீர் சேமிப்பு செய்யத் தெரியாதா? இருக்கும் வளங்களை தொலைத்துவிட்டு நொண்டிச் சாக்கு சொல்லிக்கொண்டிருப்பதில் ஏதுபயன்?

இன்று கர்நாடத்தில் மேகதாது நாளை சிம்சாவில் ஒரு அணையைக் கட்டிகொண்டு இருக்கும். நாம் கூச்சல் போட்டுகொண்டே இருப்போம். மறக்காமல் பணம் வாங்கிகொண்டு ஓட்டுபோடுவோம். அணை கட்டிக் கொண்டே இருக்கும் கர்நாடகம், கனமழையில் வரும் வெள்ளத்தை வடிகாலாக காவிரியை பயன்படுத்தும்போது, நாம் மிக கவனமாக அ(வ)ந்த நீரை கடலுக்கு அனுப்பிகொண்டே இருப்போம். அதாவது நம்மை நாமே வஞ்சித்துக்கொள்வோம். பின்னர் கூச்சலுக்கு தயார் ஆவோம். "ஐயகோ தமிழனுக்கு இழைக்கபடும் அநீதியை பாரீர்"..!

இப்பொழுது தேசிய கட்சி ஆளும் கன்னடம் மறுபடி மேகதாது பிரச்னையினை கிளப்புகின்றது. ஒருவழியாக காவேரி சிக்கல் தீர்ந்தபொழுது அடுத்த பிரச்னையினை கிளப்புகின்றது கர்நாடகம். இது சிக்கலான பிரச்னை, தமிழகத்துக்கு கொடுக்கும் நீரெல்லாம் மழைகாலத்தில் கடலுக்கு செல்கின்றது. அதை மேகதாட்டில் ஓரளவு அணைகட்டி தேக்கினால் மின்சாரம் எடுக்கலாம்; நிலத்தடி நீர் பெருகும் என்று கர்நாடகம் லாபி செய்கிறது. அதை நம்மால் தடுக்க முடியவில்லை. அது கர்நாடக அணை அல்ல. அது தேசத்தின் ஒரு அணை எனும் பொழுது யார் பதில் சொல்லமுடியும்? நிச்சயம் வீணாக செல்லும் நீரை தடுத்தல் என்பது சரி, ஆனால் அதுவே காவேரியில் தமிழக உரிமைகளை பறிப்பதாக இருக்கக் கூடாது.

ஒரு ஆற்று நீர், அது உருவாகும் இடத்திற்கு சொந்தமானதல்ல. அது பாயும் கடைமடைக்குச் சொந்தமானது என்கிற ஒரு விதி உண்டு.

மறுபடியும் மேகதாது பிரச்னை பெரிதாக கிளம்புகின்றது. ஆகஸ்ட் இருபத்தி மூன்றாம் தேதி இதற்காக கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால் கட்சிகளுக்குள் ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மாநில நலன் என்று வந்துவிட்டால் கட்சி வேறுபாடுகள் இல்லாமல் ஒரே கருத்துதான் நிலவும்.

நாம் என்ன செய்யப்போகிறோம்? மாநில நலன் கருதும் மனநிலை உள்ள அரசியல்வாதிகள் எம்மிடையே இருக்கிறார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். (அடிக்கடி இப்படி நாமும் சொல்லிப்பழகிவிட்டோம்)

Updated On: 22 Aug 2023 6:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு