/* */

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி: 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி விழாவில் 20 லட்சம் பக்தர்கள் விடியவிடிய கிரிவலம் செய்ததால் அலை மோதிய பக்தர் வெள்ளம்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி:  20 லட்சம் பக்தர்கள் கிரிவலம்
X

நள்ளிரவில்  அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பௌர்ணமி விழா கோலாகலமாக நேற்று நடந்தது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்று வழிபட்டனர். சித்ரா பௌர்ணமி விழா 2 ஆண்டுக்கு பிறகு நேற்று கோலாகலமாக நடந்தது

அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். அதற்கு அடுத்தபடியாக சித்ரா பௌர்ணமி தினத்தில் அதிகளவில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமிக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் இரவு 11 மணிவரை நடை அடைப்பு இல்லாமல், தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் திரண்டதால், கோயில் வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

வழக்கம்போல் விஐபிக்கள் வருகையும், அவர்களை உபசரிக்கவும் பிரத்யேக குழு தீவிரமாக செயல்பட்டது. அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அவர்களுக்குத் தனி வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவர்களது வாகனங்களும் அம்மணி அம்மன் கோபுர வாசல் வரை அனுமதிக்கப்பட்டது. கடும் வெயிலில் அந்தக் கருங்கல் சூட்டில் அண்ணாமலையாரை காண 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்த பக்தர்கள் முணுமுணுத்தபடியே அந்த வெயிலில் காத்துக் கொண்டிருந்தனர்.

நேற்று பகலில் கடும் கோடை வெயில் சுட்டெரித்ததால் காலை 11 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. மாலை 5 மணிக்கு பிறகு மீண்டும் கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. சுமார் 20 லட்சம் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்று வழிபட்டனர். அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது..

வழியெங்கும் நீர், மோர், பழச்சாறு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்கு வெளியே 9 இடங்களில் தற்காலிக பேருந்துநிலையங்கள் அமைத்து அங்கு பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

கிரிவலப் பாதையில் அதிக அளவில் கடைகள் காண முடிந்தது. கடந்த இரண்டு வருடங்களாக வியாபாரம் இன்றி தவித்த வியாபாரிகள், நேற்று ஒரே நாளில் அந்த இரண்டு வருட இழப்பினை ஈடு செய்ய வேண்டும் என்ற நோக்கில் பொருட்களின் விலையை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். ஆம்! தண்ணீர் பாட்டில் 40 ரூபாய், சின்ன தட்டு தர்பூசணி 20 ரூபாய், டீ 20 ரூபாய், இளநீர் 60 ரூபாய்,மோர் பத்து ரூபாய் என விற்கப்பட்டது.

தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதைக்கு பொதுமக்கள் வர இலவச பஸ் வசதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் திருவண்ணாமலைக்கு வந்து செல்ல 2,806 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் போக்குவரத்து, பொதுமக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 3,500 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோபுர நுழைவு வாயில்களில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டு பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

108 ஆம்புலன்சு வேன்கள் தயார் நிலையில் கிரிவலப்பாதையின் முக்கிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் கோவிலில் 2 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சும், கிரிவலப் பாதையில் அவசரத்திற்கு செல்ல மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் கார், வேன் போன்றவையும், ஆட்டோக்களும் இயக்க அனுமதிக்கப்பட வில்லை. கார், வேன் நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டு இருந்தது.

Updated On: 17 April 2022 1:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க