/* */

கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!

குறைந்த செலவில் பல இடங்களை திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றி பார்க்கலாம்

HIGHLIGHTS

கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
X

சாத்தனூர் அணை படகு சவாரி

சம்மர் தொடங்கியாச்சி. சென்னை உட்பட எல்லா இடங்களும் சுற்றி பார்த்தாகிவிட்டது என்று நினைப்பவர்கள், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் குறைந்த செலவில் சென்றுவிட்டு திரும்ப வேண்டும் என நினைப்பவர்களுக்கு நிச்சயம் திருவண்ணாமலை ஓர் நல்ல பயண அனுபவத்தை கொடுக்கும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், இயற்கை சார்ந்த, தொன்மம் சார்ந்த, வரலாற்று சிறப்புடைய, பண்பாட்டு சிறப்புடைய பல இடங்கள் உள்ளன. இவற்றைக் காண பணம், நேரம் இவற்றைத் தாண்டி நமக்கு மனது மட்டுமே போதும்.

திருவண்ணாமலை என்றாலே எல்லோருக்கும் நினைவு வருவது அண்ணாமலையார் கோயில்தான். ஆனால் இந்த கோயிலை தாண்டி பல்வேறு இடங்கள் இந்த மாவட்டத்தில் சுற்றிப்பார்க்க இருக்கிறது.

அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்கள்:

• திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

• மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம்

• இரமணமகரிசி ஆசிரமம்

• ஆரணி கோட்டை

• அமிர்தி உயிரியல் பூங்கா

• ஜவ்வாது மலை

• சாத்தனூர் அணை

• தேவிகாபுரம் பெரிய நாயகி கோவில்

• வந்தவாசி கோட்டை

• தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம்,

• செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்

• மாமண்டூர் குகைக் கோயில்கள்

• பிரம்மதேசம்

• படவேடு ரேணுகாதேவி அம்மன் கோயில்

• செண்பகத் தோப்பு அணை என பல இடங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது

சாத்தனூர் அணை

ஜவ்வாது மலை

கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிதான் இந்த ஜவ்வாது மலை. சுமார் 260 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த மலையில் ஏராளமான அரிய வகை மூலிகை செடிகள் இருக்கின்றன. இந்த மலையில் ஏறத்தாழ 10,500 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணக்கிடைக்கின்றன.

தற்போதும் மலையாளிகள் எனப்படும் பழங்குடி சமூக மக்கள் இந்த மலையில் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள கோவிலூர் எனும் கிராமத்தில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று இருக்கிறது.

ஜவ்வாது மலையில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்

1. ஜவ்வாதுமலை அமிர்தி

2. ஜவ்வாதுமலை பீமன் அருவி

3. ஜவ்வாதுமலை, கோட்டைப்பகுதி

4. ஜவ்வாதுமலை – மேல்பட்டு மருதமரம்

5. ஜவ்வாதுலை – மேல்பட்டு – கீழ்பட்டு புதிய கற்காலப்பகுதி

6. ஜவ்வாதுமலை – மேல்பட்டு – புலிக்குத்தி பட்டான் கல்பகுதி

7. ஜவ்வாதுமலை மேல்பட்டு – கண்ணாடி மாளிகை

8. ஜவ்வாதுமலை – கீழ்பட்டு அருவி

9. ஜவ்வாதுமலை – பண்டிரேவ் அருவி

பீமன் நீர் வீழ்ச்சி:

திருவண்ணாமலை அருகே ஜமுனாமரத்தூரிலிருந்து, 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பீமன் நீர் வீழ்ச்சியில் ஆண்டுக்கு எட்டு மாதங்கள் வரை குறைந்த சக்தியில் நீர் கொட்டுவதால் பலர் டைவ் அடித்து ஆனந்தமாக குளிப்பது வேடிக்கையான ஒன்று.

ஜவ்வாதுமலை பீமன் அருவி

கொமுட்டேரி ஏரி:

ஜவ்வாது மலையில் உள்ள பிரபலமான கோலப்பன் ஏரி, கொமுட்டேரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏரியின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை தீவுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளுக்கினங்க படகுப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இது ஏராளமான பயணிகளைக் கவர்ந்துள்ளது.

காவலூர் தொலைநோக்கி மையம்: ஜமுனாமரத்தூரிலிருந்து 11கிலோ மீட்டர் தொலைவில், வேலூர் மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள காவலூரில் இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் பிரம்மாண்ட தொலை நோக்கி அமைந்துள்ளது. ஆசியாவிலே மிகப்பெரிய இத் தொலைநோக்கி விண்வெளி குறித்த ஆய்வுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

சாத்தனூர் அணை:

திருவண்ணாமலையிலிருந்து 35 கி.மீ தொலைவில், சென்னகேசவமலைப் பகுதியில், தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்டுள்ள அணை சாத்தனூர் அணை. அழகான நீர் தேக்கம், இங்குள்ள பசுமையான பூங்காக்கள், மிக உயர்ந்த மரங்கள், முதலைப் பண்ணையுடன் கூடிய சிறிய மிருக காட்சி சாலை சுற்றுலாப் பயணிகளை கவரும் அம்சங்களாகும். .

ஜவ்வாது மலையில் அமைந்துள்ள தொலைநோக்கி கூடம்

திருமலை சமணர் கோயில்

அதேபோல மற்றொரு முக்கியமான இடம் திருமலை சமணர் கோயிலாகும். இந்த கோயிலும் ஏறத்தாழ சுமார் 1,100 ஆண்டுகள் பழமையானதாகும். வேலூரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் ஆரணியை அடுத்த திருமலை எனும் ஊரில் சிறு குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோயிலில் இயற்கையான நிறங்களை கொண்டு ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் 15ம் நூற்றாண்டில் வரையப்பட்டதாக சொல்லப்படுகிறது. இபோதும் இது அழியாமல் அப்படியே இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சமண தலங்களில் இது முக்கியமான தலமாகும்.

திருமலை சமணர் கோயில் எப்படி முக்கியமானதோ அதேபோல மாமண்டூர் குடைவரைக்கோயிலும் மிகவும் முக்கியமானதாகும். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் நரசமங்கலம் எனும் கிராமத்தில் இந்த குடைவரைக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மலை குன்றில் மொத்தம் 4 குகைகள் அமைந்துள்ளன. இதில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் அமைந்துள்ளன. இந்த மலையின் வடக்கு பகுதியின் முடிவில் சமணர் படுகை ஒன்று இருக்கிறது. இங்கு ஒரு தமிழ் கல்வெட்டு இருக்கிறது. இந்த கல்வெட்டுக்கு வயது ஏறத்தாழ 2,000 ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மலை, குகைகள், தமிழ் கல்வெட்டு என இந்த இடம் அப்படியே நம்மை ஆதிகாலத்திற்கு அழைத்து சென்றுவிடும்.

வந்தவாசி குடைவரைக்கோயில்.

இதேபோல மிக முக்கியமான மற்றொரு இடம் சீயமங்கலம் குடைவரைக்கோயில். தமிழ்நாட்டில் பல்வேறு நடராஜர் சிறபங்கள் இன்று காணப்படுகின்றன. ஆனால் இதில் எது முதன்மையானது? எது முதலில் செதுக்கப்பட்டது? என்கிற கேள்விக்கான விடை இந்த கோயிலில்தான் பொதிந்திருக்கிறது. அதாவது தமிழ்நாட்டின் முதல் நடராஜர் சிற்பம் இந்த கோயிலில்தான் செதுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வந்தவாசியின் தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் இந்த மலை குன்றும் அதில் இந்த கோயிலும் அமைந்திருக்கிறது.

என திருவண்ணாமலை மாவட்டத்தில் பல சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாருங்கள், குறைந்த செலவில் கோடை சுற்றுலாவை அனுபவித்து கண்டு களியுங்கள்.

Updated On: 2 May 2024 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்