/* */

தமிழகத்தில் 2026ல் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி- அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் 2026ல் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் 2026ல் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி- அன்புமணி ராமதாஸ்
X

அன்பு மணி ராமதாஸ்

2026-ல் பா.ம.க .தலைமையில் கூட்டணி அரசு ஆட்சி அமையும் என அன்பு மணி ராமதாஸ் கூறினார்.

அரியலூர் பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சிக்கு வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம் பி. அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கூறியதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சியின் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, 2024 நாடாளுமன்றம் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்களை அமைப்பது உள்ளிட்ட, கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பற்றி கலந்துரையாடுவதற்காக இன்று வந்திருக்கின்றேன்.

தமிழகத்தில் உள்ள பிற கட்சிகள் எல்லாம் தேவையற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முழுகவனம் செலுத்தி வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியானது மக்கள் பிரச்னைகளை தொடர்ந்து பேசி வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி பிரச்னை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட்டில் வேலை வாய்ப்பு பிரச்னை, டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்ட பிரச்னை, சுற்றுச்சூழல் பிரச்னை என பல மக்கள் பிரச்சினைகளை பேசி, மக்களை நோக்கி பாட்டாளி மக்கள் கட்சி பயணித்துக் கொண்டிருக்கிறது.

அரியலூர். பெரம்பலூர் மாவட்டத்தில் பல முக்கிய பிரச்னைகள் இருக்கின்றன. அதில் முதன்மையான பிரச்னை நீர் மேலாண்மை. சில மாதங்களுக்கு முன்பு சோழர் பாசனம் திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டு நாட்கள் எழுச்சி விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொண்டு இருந்தேன். அதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். பின்னர் முதலமைச்சருக்கு நானே கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் இதுவரை அவர் அறிவிக்கவில்லை. வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் சோழர் பாசன திட்டத்தை முதலமைச்சர் அறிவிப்பார் என நான் நம்புகிறேன். அந்தத் திட்டம் அரியலூர் மாவட்டத்திற்கு தேவையான திட்டமாகும். தற்போது மழை பெய்து வருகிறது. எதிர்வரும் 10 ஆண்டுகளில் மழை இல்லாமல் வறட்சி ஏற்படும், வறட்சியினால் உணவு பற்றாக்குறை ஏற்படும், அதனால் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த வேண்டியது மிக முக்கியமானதாகும்.

அரியலூர் மாவட்டத்தில் மற்றொரு பிரச்சினையாக இருப்பது சிமெண்ட் தொழிற்சாலைகள். அரியலூர் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 7 சிமெண்ட் தொழிற்சாலைகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. மண்ணைப் பற்றியோ மக்களைப் பற்றியோ கவலை இல்லாமல், இங்கே உள்ள மக்களின் நிலத்தினை சுரண்டி, விதிமுறைகளுக்கு மாறாக சுரங்கங்களை தோண்டி, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல், வாகனங்களை கண்மூடித்தனமாக, தாறுமாறாக இயக்கி விபத்துகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சிமெண்ட் தொழிற்சாலைகளால் அதிகப்படியான காற்று மாசுபாடு ஏற்படுகிறது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவதில்லை. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுத்தால், ஆறு மாதத்தில் அவர்களை அப்புறப்படுத்தி, வட இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளத்தை கொடுத்து வேலையில் சேர்க்கிறார்கள்.

ஜெயங்கொண்டம் நிலக்கரி சுரங்க திட்டத்தினை எதிர்த்து கடந்த 22 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி, மாவீரன் காடுவெட்டியார் தலைமையில் பல போராட்டங்கள், என் தலைமையில் பல போராட்டங்கள் பலவற்றை நடத்தி நிலத்தைத் திருப்பி தர வைத்தோம். திருப்பித் தருவோம் என அறிவித்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது வரை எதுவும் திருப்பி கொடுக்கப்படவில்லை. அரசு உடனடியாக திருப்பி தர வேண்டும்.

தை மாதத்தில் பொதுவாக மழை பெய்யாது. இது அறுவடை மாதம். இலங்கையில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, டெல்டா பகுதிகளில் மழை பெய்கிறது. வடவாறு பகுதிகளில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சாய்ந்து விட்டது, முளைக்க ஆரம்பித்துவிட்டது. தமிழக அரசு இழப்பீடு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் தமிழ்நாடு அரசு இழப்பீடாக நிவாரணமாக வழங்கிட வேண்டும். அதேபோல காப்பீடு நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்கிட வேண்டும். இவை எல்லாம் போதாது, ஏற்பட்ட இழப்பினை சரி செய்யாது என்றாலும் குறைந்தபட்சம் கண்டிப்பாக மக்களுக்கு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. நேற்று, இன்று அறுவடை செய்ய வேண்டிய நெல் எல்லாம் சாய்ந்து பாழாகிவிட்டது.

மேலும் அறுவடை செய்த எஞ்சிய நெல்லை கொள்முதல் செய்யும் போது,, ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் ஈரப்பதத்தில் விலக்கு கொடுத்து கொள்முதல் செய்திட வேண்டும். அதனை தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும். இது போன்ற காலம் தவறிய மழை கடந்த ஆண்டும் பெய்தது, அதற்கு முந்திய ஆண்டும் பெய்தது, காலநிலை மாற்றத்தினால் இத்தகைய பிரச்சினைகள் உண்டாகிறது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம்.

அரியலூர் மாவட்டத்தில் அதிகப்படியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படும் தொழிற்சாலை மற்றும் சுரங்கங்களின் வாகனங்கள் தான் விபத்திற்கு காரணமாக இருக்கின்றன. அவ்வாறு தாறுமாறாக விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கும் இந்த சுரங்கங்கள் தொழிற்சாலைகள் எங்களுக்கு தேவையில்லை. வாகனத்தை இயக்குவதில் இங்கு உள்ள தொழிற்சாலைகளும் சுரங்கங்களும் கூடுதல் கவனமாக செயல்பட வேண்டும்.

அதேபோல செந்துறை பகுதியில் முந்திரி தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். முந்திரியை பதப்படுத்தி வைப்பதற்கும், மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் வசதிகளையும் ஏற்படுத்தி தர தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும். முந்திரிக்கு உலகளவில் மிகப்பெரிய விற்பனை சந்தை இருக்கிறது. தற்பொழுது ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அதிக அளவிலான முந்திரிகள் ஏற்றுமதி ஆகிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்தப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள முன் வரவேண்டும்.

கரும்பிற்கு ஒரு டன்னுக்கு 5000 ரூபாயும், நெல் ஒரு குவிண்டாலுக்கு 3500 ரூபாயும் வழங்கிட வேண்டும். வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் மட்டும் போட்டால் போதாது. அவர்களின் கஷ்டத்தைப் போக்க கொஞ்சமாவது முன்வர வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனம் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த துடிக்கின்றது. அதற்கு அந்த மாவட்ட அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனியாருக்கு விற்கப்பட இருக்கின்ற நிலையில், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட 10,000 ஏக்கர் நிலங்கள் இன்னும் கையில் இருக்கும் நிலையில், அதனை வைத்தே 40 ஆண்டுகள் செயல்படலாம் என்ற நிலையில், எதற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்த வேண்டும்?

தனியாருக்கு விற்கப்படுகிறது என்பதால், இதனை வாங்க இருக்கும் கம்பெனியின் ஏஜெண்டுகளாக என்.எல்.சி. தரகர்களாக அமைச்சர்களும் அதிகாரிகளும் செயல்படுகிறார்களா என்ற சந்தேகமும் எங்களுக்கு வந்திருக்கிறது. எட்டடியில் இருந்த நிலத்தடி நீர் இன்று ஆயிரம் அடிக்கு சென்று விட்டது. என்.எல்.சி. விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் பின்வாங்காது. நிச்சயமாக இதனை வெற்றிகரமாக நாங்கள் முடிப்போம். மக்களை அச்சுறுத்தி, ஆசைவார்த்தை கூறி நிலங்களை கையகப்படுத்த தரகர் வேலை பார்ப்பதை அமைச்சர்களும் அதிகாரிகளும் கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான கட்சியா தி.மு.க. என்ற சந்தேகம் எங்களுக்கு உருவாகி இருக்கிறது. இது தொடர்பான விளக்கத்தை முதலமைச்சர் அளிக்க வேண்டும்.

மறுபுறம் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வரும் டெல்டா பகுதியான, வீராணம் ஏரி பாசனப்பகுதியில் உள்ள நிலங்களில் புதிய வீராணம் நிலக்கரித் திட்டம் என்ற ஒன்றை அறிவித்து, 200 இடங்களில் நிலக்கரி மாதிரியை எடுத்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். முப்போகம் விளையும் இந்த நிலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளக்கூடாது. உடனடியாக என்.எல்.சி. நிறுவனம் இந்த மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும்.

ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்து இட மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. பலமுறை காரணமும் கேட்டுபார்த்தும் இதுவரை அவர் வாய் திறக்கவில்லை. அவசர சட்டத்திற்கு அனுமதி அளித்தவர், சட்ட மசோதாவிற்கு ஏன் அனுமதி அளிக்க மறுக்கிறார்? சட்ட மசோதா வந்த பிறகு இதுவரை 12 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த 12 பேரின் ரத்தக்கரை ஆளுநரின் கையில் தான் இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தினால் பாதிக்கப்படும் குடும்பங்களை பற்றியோ, தமிழ்நாடு பற்றியோ, இளைஞர்களை பற்றியோ சிறிதும் அக்கறை இல்லாமல் கவலை கொள்ளாமல் ஆளுநர் இருக்கிறார். இது நல்ல போக்கு அல்ல.

அதேபோன்று குட்கா தடை சட்டம் தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக நாடு முழுவதும் குட்கா தடை சட்டம் அமலில் இருக்கும் நிலையில், சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி குட்கா தடை சட்டத்தை ரத்து செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த நிறுவனங்களுக்கு நீதிமன்றம் சாதகமாக செயல்பட்டது போல் தெரிகிறது. தெலுங்கானாவில் குட்கா தடை சட்டம் செல்லும் என மாநிலத்தின் தலைமை நீதிபதி தீர்ப்பளிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் செல்லாது என அறிவித்திருப்பது வினோதமாக இருக்கிறது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். இத்தகைய நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பற்றி செய்தியாளர் கேட்ட போது, ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்கு தேவைப்படும் நேரத்தில் வேண்டுமானால் இடைத்தேர்தல் நடத்தலாம். சுயேட்சைகள் இறந்து விட்டால் இடை தேர்தல் நடத்தலாம். மாறாக தேவையில்லாத நேரங்களில் எந்த கட்சியின் உறுப்பினர் இறந்தாரோ, அந்த கட்சியின் தலைமைக்கு அதிகாரத்தை விட்டு விட வேண்டும், அது தொடர்பான சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும், அவர்கள் கட்சியின் சார்பில் ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பலாம். இது எங்களுடைய பல வருட கோரிக்கையாக இருக்கிறது என்றார்.

மேலும் 55 ஆண்டு காலம் அ.தி.மு.க, தி.மு.க. மாறி மாறி ஆட்சி செய்து விட்ட நிலையில், 2026ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அதற்கான வியூகங்களை அமைத்துக் கொண்டிருக்கின்றோம். பாட்டாளி மக்கள் கட்சி வாக்கு வங்கி மேலும் மேலும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்.

Updated On: 5 Feb 2023 9:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  8. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  9. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு