/* */

பெண் கொலை: நாமக்கல் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியல் போராட்டம்

ஜேடர்பாளையம் அருகே கொலையான பெண்ணின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள், நாமக்கல் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பெண் கொலை: நாமக்கல் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியல் போராட்டம்
X

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையம் கரப்பாளையத்தை சேர்ந்தவர் விவேகானந்தன், விவசாயி. இவரது மனைவி நித்யா (27). நேற்று முன்தினம் மதியம் நித்யா வழக்கம் போல் தங்களது ஆடுகளை வீட்டின் அருகே மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. ஆடுகள் மட்டும் வீட்டிற்கு தானாக வந்துள்ளன.

அதிர்ச்சியடைந்த கணவர் விவேகானந்தன், மனைவி நித்யாவை தேடி சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஓடையின் அருகே முட்புதரில் மனைவி நித்யா ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து விவேகானந்தன் ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். விரைந்து வந்த போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், நித்தியாவின் உடலை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்தது. அப்போது பிரேதத்தை வாங்க மறுத்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் நித்யாவை கொலை செய்தது வட மாநில தொழிலாளர்கள் எனவும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரியும், ஆஸ்பத்திரிக்கு முன்பு, நாமக்கல் -மோகனூர் மெயின் ரோட்டின் குறுக்கே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ரோட்டின் இரு புறங்களிலும் வாகனங்கள் தேங்கி நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தங்களது பகுதியில் உள்ள வெல்லம் தயாரிப்பு ஆலைகளில், வட மாநில இளைஞர்கள் பலர் தங்கி பணிபுரிகின்றனர். அவர்கள் நித்யாவின் விவசாய தோட்டத்திற்கு வந்து அங்கு உள்ள பண்ணை குட்டையில் மீன் பிடிப்பது வழக்கம். பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து பண்ணை குட்டைக்கு வந்து மீன் பிடித்து செல்கின்றனர். நித்யா கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடத்தில் மீன் பிடி தூண்டில்கள் இருந்தன. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

அவர்களை சமரசம் செய்த போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் நித்யா கொலைக்கான காரணம் தெரிய வரும். அதன்பிறகு இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்டுஅவர்கள், மறியலை கைவிட்டு நித்யாவின் பிரேதத்தை பெற்றுச் சென்றனர்.

Updated On: 13 March 2023 3:30 AM GMT

Related News