/* */

திருவண்ணாமலை - தாம்பரம் ரயில் சேவை எப்ப வருமோ?

விழுப்புரம் - காட்பாடி இடையே அகல ரயில் பாதைக்காக நிறுத்தப்பட்ட திருவண்ணாமலை - தாம்பரம் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை

HIGHLIGHTS

திருவண்ணாமலை - தாம்பரம் ரயில் சேவை எப்ப வருமோ?
X

பைல் படம்

நினைத்தாலே முக்தி தருகின்ற திருத்தலம், பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக வீற்றிருக்கிற திருத்தலம், அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் திருத்தலம், மலையே மகேசன் என்று போற்றி பக்தர்கள் வணங்குகின்ற திருத்தலம், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ள திருத்தலம் என உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை திருத்தலம் ஆகும்.

வைணவர்களுக்கு தலைநகரம் ஸ்ரீரங்கம், சைவத்திற்கு தலைநகரமாக விளங்குவது திருவண்ணாமலை ஆகும். இம்மலையை, கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி நாளில் லட்சக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.

திருச்சுழியில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த ரமணரை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டிய ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார், உள்ளிட்ட மகான்கள் மற்றும் சித்தர்களின் ஆசிரமங்கள் உள்ளன.

அண்ணாமலையார் கோயிலை சுற்றி கிரிவலப் பாதையில் மகான்களின் ஆசிரமங்கள், அஷ்ட லிங்க கோயில்கள் என நிறைந்த திருவண்ணாமலையானது ஒரு ஆன்மீக பூமியாகும்.

இத்தலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா ,தெலுங்கானா ,புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் அதிகம் வருகின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கு திருவண்ணாமலையில் இருந்து தலைநகர் சென்னைக்கு நேரடி ரயில் சேவை இல்லாதது பக்தர்கள், பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்டோருக்கு மிகப்பெரிய குறையாகவே உள்ளது.

விழுப்புரம் - காட்பாடி இடையே இருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு இதற்காக, திருவண்ணாமலை - தாம்பரம் இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி நிறுத்தப்பட்டன.

அகல ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்று, விழுப்புரம் - காட்பாடி இடையே கடந்த 10 ஆண்டுகளாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அகல ரயில் பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட திருவண்ணாமலை - தாம்பரம் இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை.

இது குறித்து ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சருக்கு தமிழக அரசும் கடிதம் எழுதி, அழுத்தம் கொடுத்தது. நாடாளுமன்றத்திலும் குரல் கொடுக்கப்பட்டன. எத்தகைய அழுத்தத்துக்கும் ரயில்வே அமைச்சகம் செவி சாய்க்கவில்லை. திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை என்பது கடந்த 16 ஆண்டுகளாக கானல் நீராகவே நீடிக்கிறது.

இது குறித்து பக்தர்கள் கூறும்போது, “சென்னையில் இருந்து வேலூர் அல்லது விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு நேரடியாக ரயில் சேவை அவசியமானது. சென்னை மக்கள் மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் பயன்பெறுவர். ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் இருந்து, தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு ரயில் சேவை இல்லை என்பது வேதனை அளிக்கக்கூடியதாகும் என கூறினர்

திருவண்ணாமலை திண்டிவனம் ரயில் பாதை திட்டம் 2007- 2008 நிதியாண்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டமும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இத்திட்டம் குறித்து திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் திருவண்ணாமலை திண்டிவனம் ரயில் பாதை பணிகள் நடைபெற வேண்டும், அதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என பேசியும் எழுதியும் வந்துள்ளார்.

கடந்த முறை அவர் பேசுகையில், திருவண்ணாமலை ஆன்மீக நகரம் எனவே ஆன்மீக நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்வே திட்டங்கள் அமைக்கப்பட்டு அதில் திருவண்ணாமலையையும் இணைத்து வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் திருவண்ணாமலை தொகுதி எம்பி அண்ணாதுரை வலியுறுத்தலின் பேரில் பாண்டிச்சேரியில் இருந்து ஹவுரா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்பது ஒரு சின்ன ஆறுதலான செய்தியாகும்

திருவண்ணாமலை திண்டிவனம் ரயில் பாதை எப்போது நிறைவடையும் ? அல்லது திருவண்ணாமலை சென்னை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுமா ? என மாவட்ட மக்கள் , பக்தர்கள், வணிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அனைத்து தரப்பு மக்களின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா? அண்ணாமலையாருக்கு தான் வெளிச்சம் .

Updated On: 10 Sep 2023 11:49 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...