சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
கோப்பு படம்
சென்னையின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான அம்பா குழுமம், தாஜ் ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளுக்கு பெயர் பெற்ற இந்தியாவின் முன்னணி ஹோட்டல் நிறுவனமான இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்துடன் (IHCL) இணைந்து சென்னையில் முதல் முறையாக பிராண்டட் குடியிருப்புகளான ‘தாஜ் ஸ்கைவியூ ஹோட்டல் மற்றும் ரெசிடென்சிஸ் (Taj Skyview Hotels and Residencies) தொடங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை நகரில் மிக உயரமான குடியிருப்புகளாக இது அமையும். இதன் மொத்த கட்டுமான மதிப்பு ரூ. 850 கோடியாக ஆகும். 253 தாஜ் ஹோட்டல் அறைகள், மற்றும் 123 பிராண்டெட் தாஜ் குடியிருப்புகள் இதில் உள்ளடங்கும்.
அம்பா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அம்பா பழனியப்பன், “தாஜ் மற்றும் அம்பா குழுமம் இணைந்து தொடங்கியுள்ள இந்த குடியிருப்புகளின் கட்டுமானப்பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், 2027- ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக முடிந்து விடும். எங்கள் நிறுவனம் முதற்கட்டமாக ரூ. 200 கோடி முதலீடு செய்துள்ளது” என்று கூறினார்.
இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு கோபுரங்களும், ஒரு தாஜ் ஹோட்டலும் கொண்ட 4 போடியம் ஸ்டேஜ் கட்டிடங்களை இத்திட்டம் கொண்டிருக்கும். 3 பேஸ்மெண்ட்டுகள் மற்றும் 23 அடுக்குமாடிகள் இருக்கும் குடியிருப்புகளின் அளவு 2,500 சதுரடியில் இருந்து 5,900 சதுரடி வரை அமையவுள்ளன. இங்கு அமையவுள்ள வீடுகளின் விலை ரூ. 6.5 கோடியில் தொடங்கி ரூ. 19 கோடி வரை இருக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.
உலகத்தரம் வாய்ந்த வசதிகள் அனைத்தும் இங்கு வசிக்கப்போகும் குடியிருப்பாளர்களுக்கு கிடைக்கும்படி வடிவமைக்கின்றனர். 24 மணி நேர மின்வசதி, முழுவதுமாக குளிரூட்டப்பட்ட அறைகள், ஃபிட்னஸ் ஸ்டூடியோ, குளிரூட்டப்பட்ட பாட்மிட்டன் மைதானம், டென்னிஸ், ஸ்குவாஷ் மைதானம், உள்ளிட்ட வசதிகளுடன் தாஜ் ஹோட்டலில் இருக்கக்கூடிய வசதிகளான பார், உணவகங்கள், ஸ்பா, சலூன், தியேட்டர் முதலியவற்றையும் இந்த பிரமாண்ட குடியிருப்புக்குள் வசிப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
“இதுபோன்ற உலகத்தரம் வாய்ந்த அனைத்து வசதிகளும் உடைய ஹோட்டல் மற்றும் ரெசிடென்ஸி இந்தியாவில் வேறெங்கும் கிடையாது என்பதை நான் உறுதியாக கூறுவேன். அம்பா குழுமத்துடன் இணைந்து சென்னையில் இந்த முயற்சியை முதன்முதலில் மேற்கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். துபாயில் உள்ள ரூஃப் டாப் உணவகங்கள் வசதியை போன்ற வசதிகளை சென்னையிலும் ஏற்படுத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். இந்தியாவில் உள்ள முக்கியமான 8 மெட்ரோபாலிட்டன் நகரங்களில் அடுத்தடுத்து இந்த முயற்சிகளை தாஜ் நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது.
மதுரையில் ஏற்கனவே ஹோட்டல் நிறுவியுள்ள நிலையில், அங்கு மேற்கொண்டு விரிவுப்படுத்தலாம் என்று நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்,” என்று IHCL -ன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான புனித் சத்வால் கூறினார்.
“இது போன்ற வசதிகளைக் கொண்ட குடியிருப்புகளை மெட்ரோ நகரங்களில் அமைக்கும் பொழுது, அதிக சொத்து மதிப்புள்ளவர்கள் (High Net Worth Individuals) இதை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். குறைந்தபட்சமாக 8 பெருநகரங்களில் ஹோட்டல் மற்றும் ரெசிடென்சி வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம்.
சென்னையில் தாஜ் கன்னிமாரா, தாஜ் கோரமண்டல், தாஜ் வெல்லிங்டன் மற்றும் தாஜ் ஃபிஷர்மேன்’ஸ் கோவ் வரிசையில் ஐந்தாவதாக தாஜ் ஸ்கைவ்யூ ஹோட்டல் மற்றும் ரெசிடென்ஸி நிறுவுவதன் மூலம் சென்னைக்கு ஒரு முக்கிய வளர்ச்சியாக இருக்கும்” என்று IHCL ரியல் எஸ்டேட்டின் நிர்வாக துணைத் தலைவர் சுமா வெங்கடேஷ் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu