/* */

கடலூரில் மழை பாதித்த பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வெள்ள சேதங்களை மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பு அலுவலர், எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்

HIGHLIGHTS

கடலூரில் மழை பாதித்த பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
X

 கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடலூர் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அதிகாரி அன்சுல் மிஸ்ரா ஆய்வு செய்தார்

கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடலூர் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அதிகாரி அன்சுல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் பெய்துவரும் பருவ மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் கடலூர் மாவட்டம் தென்பெண்ணையாற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு கரையோரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையினால் கோமுகி அணை திறக்கப்பட்டு கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அழகிய நத்தம், வெள்ளபாக்கம், பெரியகங்கனாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, திருவந்திபுரம், கே.என் பேட்டை, நரிமேடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளும், விளை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள நகரப்பகுதிகளான ஆல்பேட்டை திடீர் குப்பம், குமரப்பன் நகர் குறிஞ்சி நகர், என பல்வேறு பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் நீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் வெள்ள நீர் வடிய முகத்துவாரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கடலூர் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அதிகாரி அன்சுல் மிஸ்ரா கேட்டறிந்தார். மேலும், கடலூர் சுனாமி நகர் பகுதியில் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட போது பொதுமக்கள் குடிநீர் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.


Updated On: 21 Nov 2021 3:15 PM GMT

Related News