தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை

தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
X

மேகமலையில் பெய்து வரும் மழையால் தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அக்னிநட்சத்திரம் இந்த ஆண்டு இல்லையோ என கேட்கும் அளவுக்கு குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பகல் பொழுது கூட இருளடைந்து சில்லென காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசுகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கனமழை எச்சரிக்கைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின் படி நேற்று மாவட்டத்தில் பரவலாக மழை பதிவானது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு வருமாறு: தேனி அரண்மனைப்புதுாரில் 23.4 மி.மீ., வீரபாண்டியில் 2 மி.மீ., பெரியகுளத்தில் 8 மி.மீ., மஞ்சளாறில் 8 மி.மீ., சோத்துப்பாறையில் 87 மி.மீ., வைகை அணையில் 1.4 மி.மீ., போடியில் 7.4 மி.மீ., உத்தமபாளையத்தில் 10.6 மி.மீ., கூடலுாரில் 3.4 மி.மீ., பெரியாறு அணையில் 3.8 மி.மீ., தேக்கடியில் 14 மி.மீ., சண்முகாநதியில் 4.2 மி.மீ., மழை பதிவானது.

இந்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது. குறிப்பாக வைகை அணைக்கு விநாடிக்கு 216 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி- சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக 72 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 51 அடியாக உள்ளது. பெரியாறு அணை நீர் மட்டம் 115.40 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 308 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து தேனி மாவட்ட குடிநீருக்கு விநாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 114 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 135 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

மஞ்சளாறு அணை, சண்முகாநதி அணைகளுக்கும் நீர் வந்து கொண்டுள்ளது. இந்த மழையால் சுருளி அருவி, சின்னசுருளி அருவி, கும்பக்கரை அருவி, போடி அணைக்கரைப்பட்டி அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும் மழை பெய்யும் என்பதால் ஆறுகள், நீரோடைகள், அருவிகளில் யாரும் குளிக்க வர வேண்டாம் என வனத்துறை அறிவித்துள்ளது. இந்த மழையும், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையும் மக்களையும், விவசாயிகளையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Tags

Next Story