/* */

தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பம் செய்ய அலைமோதிய கூட்டம்

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க ஏராளமானோர் திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலகங்களில் திரண்டனர்.

HIGHLIGHTS

தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பம் செய்ய அலைமோதிய கூட்டம்
X

திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலகங்களில் தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்வதற்காக ஏராளமானவர்கள் குவிந்தனர்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட் டோர் விண்ணபித்தால், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் நபருக்கு முன்னுரிமை அளிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஏற்கனவே உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், இடைநிலை ஆசிரியர்கள் 678, பட்டதாரி ஆசிரியர்கள் 811, முதுநிலை ஆசிரியர்கள் 259 உள்பட மொத்தம் 1,748 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான பட்டியல், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு நேற்று தொடங்கியது. அதையொட்டி, திருவண்ணாமலை, போளூர், செங்கம், ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களில், நூற்றுக்கணக்கானோர் நேற்று விண்ணப்பங்களை அளித்தனர். இணையதள முகவரியிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவித்திருந்தும், பெரும்பாலானோர் நேரில் விண்ணப்பங்களை அளித்தனர்.

விண்ணப்பங்களை அளிக்க இன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இன்று விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்காலிக ஆசிரியர் பணியில் சேருவோருக்கு, இடைநிலை ஆசிரியருக்கு ரூபாய் 7,500, பட்டதாரி ஆசிரியருக்கு ரூபாய் 10 ஆயிரம், முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூபாய் 12,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எதிர்காலத்தில் நிரந்தர பணி வழங்கும்போது, முன்னுரிமை கிடைக்கும் என்ற எண்ணத்தில், தற்காலிக ஆசிரியர் பணியில் சேர ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

போளூர் கல்வி மாவட்டத்தில் 38 மேல்நிலைப் பள்ளிகளில் 55 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், 33 உயர்நிலைப் பள்ளிகளில் 164 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 84 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 296 தொடக்கப் பள்ளிகளில் 141 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 3 பட்டதாரி ஆசிரியர் என மொத்தம் 363 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க போளூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கோனார் குவிந்தனர். அனைவரும் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, உரிய கல்வி சான்றுகளுடன் மனு கொடுத்தனர்.

Updated On: 5 July 2022 2:11 PM GMT

Related News