/* */

ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைப்பு.. தபால் நிலையங்களில் சிறப்பு முகாம்கள்...

தூத்துக்குடி அஞ்சலக கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

HIGHLIGHTS

ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைப்பு.. தபால் நிலையங்களில் சிறப்பு முகாம்கள்...
X

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்கவும், பொதுமக்கள் ரூ. 10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு பெறவும், ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தின் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்தல்:

மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளில், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 22000 பயனாளிகள் e-kyc செய்ய வேண்டி இருப்பதாக அறியப்பட்டுள்ளது. PM KISAN இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP (One Time Password) அங்கீகாரத்தை பயன்படுத்தி e-kyc செய்ய வேண்டும்.

விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பது அவசியம் என்பதால், தங்களது அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியரை தொடர்பு கொண்டு ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்து பயன்பெறலாம்.

ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்த பிறகு, https://pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற PM KISAN இணையதளத்தில் அல்லது PM KISAN செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP (One Time Password) அங்கீகாரத்தை பயன்படுத்தி, e-kyc செய்து கொள்ளலாம்.

மேலும், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெரும் பயனாளிகள் e-kyc முறையை பயன்படுத்தி பதிவு செய்ய ஆதாருடன் மொபைல் எண் இணைத்திருக்க வேண்டியது அவசியமாகும். எனவே பயனாளிகள், தபால் காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் தங்கள் ஆதாரில் மொபைல் எண்ணை இணைத்து கொள்ளலாம். இந்த சேவைக்கு ரூ. 50 கட்டணமாக பெறப்படுகிறது.

ரூ. 10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு பெரும் வசதி:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 18 வயது முதல் 65 வயது வரை உள்ள பொதுமக்கள் பயன் பெரும் வகையில் ஆண்டிற்கு ரூ. 399 செலுத்தி ரூ. 10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு பெறும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. எளிய மக்களுக்கும் காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில் அஞ்சலகங்களில் (தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர்கள்) மூலம் மிக குறைந்த பிரீமியத் தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மீனவர்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகளில் பணி புரியும் ஊழியர்கள், ஆட்டோ, சிற்றுந்து, பேருந்து, கனரக வாகன ஓட்டுநர்கள், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், மின் மற்றும் மின்சார வாரிய பணியாளர்கள், கட்டுமான தொழில் செய்பவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்றவர்கள், பனை மரம் ஏறுபவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைத்து வகையான பணி செய்பவர்களும் ஆண் பெண் பாகுபாடின்றி இந்த விபத்து காப்பீடு பெற்று பயனடையலாம்.

தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகையான தொழிற்சாலைகள், தங்கள் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு மொத்தமாகவும் இந்த காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம். பணி புரியும் அலுவலகங்களிலேயே சிறப்பு முகாம் நடத்தி பணியாளர்கள் இந்த விபத்து காப்பீட்டு வசதியை பெரும் வகையில் ஏற்பாடு செய்து தரப்படும்.

எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை மூலம் வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படும்.

காப்பீடு திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

ரூ. 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம்), விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ. 60000 வரை, புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ. 30000 வரை).

விபத்தினால் மரணம் மற்றும் ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.100000 வரை வழங்கப்படும். விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படி தொகை ஒரு நாளைக்கு ரூ. 1000 வீதம் 10 நாட்களுக்கு வழங்கப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ. 25000 வரை வழங்கப்படும்.

விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ. 5000 வரை வழங்கப்படும். ஆண்டிற்கு வெறும் ரூ. 399-இல் பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்து காப்பீட்டு பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும், நிதி நெருக்கடிகளையும், உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதால், தூத்துக்குடியில் உள்ள பொது மக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பித்தல்:

மத்திய அரசு, மாநில அரசு, EPFO அல்லது வேறு எந்த பொது துறைகளின் மூலம் ஓய்வூதியம் பெறுவோரும் இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்களின் இருப்பை உறுதி செய்யும் வழக்கம் இருந்து வந்தது.

மேலும், மிகவும் வயதான ஓய்வூதியதாரர்கள் பலர் உயிரோடு இருந்தும் நேரில் சென்று ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியாமல் ஓய்வூதியம் பெற இயலாமல் போகின்றது. அதனை தவிர்க்கும் முயற்சியாக, மத்திய அரசின் ஜீவன் பிரமான் திட்டத்தில், இந்திய அஞ்சல் துறையின், "இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி" மூலம் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களில் சென்று டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்று சமர்ப்பித்து தங்கள் இருப்பை உறுதி செய்ய முடியும்.

மேலும், உங்கள் பகுதி தபால்காரர் மூலமும் ஆயுள் சான்று சமர்ப்பிக்கும் வசதி உள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆதார், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், சில நிமிடங்களில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும. இதற்கு சேவை கட்டணமாக 70 ரூபாய் செலுத்த வேண்டும்.

எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம் நாட்களை பயன்படுத்தி அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்கு சென்று அஞ்சல்துறையின் சேவையை பெற்று பயனடையலாம் என்று தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தின் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Dec 2022 2:12 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  5. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  6. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  7. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!