திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
X

கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல், அதிகாரிகள் நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019 ம் ஆண்டு அரசு தடை விதித்தது. அதன்படி பிளாஸ்டிக் பைகள், உறிஞ்சு குழல்கள், தட்டுகள், பிளாஸ்டிக் பேப்பர், டீ, குடிநீர் கப்புகள், கரண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட நெகிழி வகைகளை வியாபாரிகள் விற்பனை செய்து வந்தாலும் பயன்படுத்தினாலும் அபராதம் விதிப்பதோடு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வப்போது அதிகாரிகள் கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அதிகாரிகளுக்கு கிடைத்த உத்தரவின் பேரில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் 95 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கம் பேரூராட்சி ஆய்வாளர் சொக்கநாதன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் சின்னையன் உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் செங்கம் நகரில் உள்ள உணவகங்கள், இனிப்பகங்கள், காய்கனி கடைகள், ஜவுளி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஒரு வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்த போது அங்கு சுமார் 95 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் விற்பதைக் கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது மேலும் சில கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 100, 500 , என மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு தொடர்ந்து தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்தினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும், மேலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை எடுத்துச் சென்றனர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை கடைகளுக்கு விற்பனை செய்தவரிடம் இருந்து சுமார் 10 கிலோ நெகிழி பைகளை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்

வந்தவாசி நகரில் ஒருவர் சைக்கிளில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை எடுத்துச் சென்று ஒவ்வொரு கடைகளுக்கும் விற்பனை செய்வதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பெயரில் நகராட்சி மேலாளர் ரவி துப்புரவு ஆய்வாள இராமலிங்கம் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் வந்தவாசி காந்தி சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது வந்தவாசி குளத்து மேட்டு பகுதியை சேர்ந்த சுலைமான் சேட்டு என்பவர் சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை எடுத்து வந்து அந்த சாலையில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதை கண்டனர்.

இதனை அடுத்து அவரிடம் இருந்து 10 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப்பை பறிமுதல் செய்து அதிகாரிகள் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil