/* */

தமிழகத்தில் சோயாபீன் சாகுபடி: வேளாண்மைத்துறை மூலம் ஊக்குவிக்க வேண்டுகோள்

தமிழகத்தில் கோழித்தீவன மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் சோயாபீன் சாகுபடி வேண்டுகோள்.

HIGHLIGHTS

தமிழகத்தில் சோயாபீன் சாகுபடி: வேளாண்மைத்துறை மூலம் ஊக்குவிக்க வேண்டுகோள்
X

நாமக்கல் அருகே சோயாபீன் பயிரிட்டுள்ள வயலை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

தமிழகத்தில் கோழித்தீவன மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தீவன விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே தமிழகத்தில் விவசாயிகள் சோயாபீன் சாகுபடி செய்ய வேளாண்மைத்துறை ஊக்குவிக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 1,000 முட்டைக்கோழிப்பண்ணைகளும், 35,00 கறிக்கோழிப் பண்ணைகளும் உள்ளன. இங்கு சுமார் 5 கோடி முட்டைக்கோழிகள் மற்றும் 3 கோடி பிரய்லர் கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. முட்டைக்கோழி உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு தினசரி சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோழிகளுக்குத் தேவையான தீவனம் தயாரிக்க அரிசி, மக்காச்சோளம், கோதுமை, சோயா புண்ணாக்கு, கடலைப்புண்ணாக்கு, தவிடு, மீன்தூள் ஆகியவை முக்கிய மூலப் பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான தீவன மூலப்பொருட்கள், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து, லாரிகள் மற்றும் சரக்கு ரயில்கள் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, கோழித்தீவனத்தின் முக்கிய மூலப்பொருளாக சோயாபுண்ணாக்கு உள்ளது. தீவனத்தில் 20 சதவீதம் சோயா புண்ணாக்கு சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் சோயா பயியிர் இதுவரை சாகுபடி செய்யப்படுவதில்லை. முழுமையாக வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால், தட்டுப்பாடு ஏற்பட்டு இதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதம் முன்பு ஒரு கிலோ ரூ.60 ஆக இருந்த சோயா புண்ணாக்கு விலை தற்போது ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தீவன உற்பத்தி செலவு அதிகரித்து கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சோயா புண்ணாக்கு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கருத்தில் கொண்டு, கோழிகளுக்கு முக்கிய தீவன மூலப்பொருளான சோயாபீனை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய, தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து, சொசைட்டியின் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில், கோழித்தீவனத்திற்கு தேவையான சோயா புண்ணாக்கு தேவை அதிக அளவில் உள்ளது. சோயா புண்ணாக்கை கடந்த 40 ஆண்டுகளாக, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஸ்டிரா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வாங்கி பயன்படுத்துகிறோம். இந்த ஆண்டு, சோயா தேவை அதிகரித்துடன், அதன் விலையும் உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு நாள் ஒன்றுக்கு 8,000 டன் சோயா புண்ணாக்கு தேவைப்படுகிறது. ஒரு கிலோ, ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்ட சோயா, தற்போது, 100 முதல், 110 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனால், கோழிப்பண்ணையாளர்கள் முயற்சி எடுத்து ஒவ்வொருவரும் 5 ஏக்கர், 10 ஏக்கர் சோயா பயிர் செய்ய முடிவு செய்துள்ளோம். அதன்படி தமிழகத்தில் முன் மாதிரியாகவும், முதல் முயற்சியாகவும் நாமக்கல்லில் 10 ஏக்கரில் சோயா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சோயா பயிரிட்டு தற்போது 45 நாட்கள் பயிராக வளர்ந்தள்ளது. இன்னும் 60 நாட்களில் சோயா அறுவடைக்கு வந்துவிடும். தமிழகத்தில் சோயா பீன்சுக்கு தேவை அதிகம் உள்ளது. அதனால் விவசாயிகள் சோயா பயிரிட்டால் கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் மூலம் நேரடியாக கொள்முதல் செய்ய தயாராக உள்ளோம். தமிழகத்தில் சோயா மில்க், சோயா எண்ணை, சோயா புண்ணாக்கு போன்றவை உற்பத்தி செய்யும் வகையில் 4 தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. சோயா சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், தமிழக வேளாண் துறை சார்பில், ஒன்றிய அளவில் வேளாண் மையங்களில், சோயா விதைகளை வாங்கி விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். சோயா பயிரிரை, வாழை, மரவள்ளி, கடலை, கரும்பு போன்ற பயிர்களில், ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். இறவை பயிராகவும், மானாவாரியாகவும் இதை பயிர் செய்யலாம். சொட்டு நீர் பாசன முறையிலும் இவற்றை பயிர் செய்யலாம். தமிழகத்தில் சோயா சாகுபடியை அதிகரிப்பதன்மூலம் விவசாயிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் அதே நேரத்தில் கோழிப்பண்ணையாளர்களுக்கும் தேவையான சோயாபீன் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

Updated On: 3 Sep 2021 11:15 AM GMT

Related News