/* */

நாமக்கல் மாவட்டத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குச்சாவடிகள் அனைத்து தயார் நிலையில் உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்
X

நாமக்கல் நகராட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள், நகராட்சி அலுவலகத்தில் இருந்து மினி லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெறும் தேர்தலில், நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்துகளில் உள்ள மொத்தம் 439 வார்டுகளுக்கு 1,748 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 5.57 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, கொமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய 5 முனிசிபாலிட்டிகளுக்கும், ஆலாம்பாளையம், அத்தனூர், எருமப்பட்டி, காளப்பநாய்க்கன்பட்டி, மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, படைவீடு, பாண்டமங்கலம், பரமத்தி, பட்டணம், பிள்ளாநல்லூர், பொத்தனூர், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, சேந்தமங்கலம், வேலூர், வெங்கரை, வெண்ணந்தூர் ஆகிய 19 டவுன் பஞ்சாயத்துக்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 5 முனிசிபாலிட்டிகளில் 39 வார்டுகளும், 19 டவுன் பஞ்சாயத்துக்களில் 294 வார்டுகளும் உள்ளன.

போட்டியின்றி தேர்வு:

நாமக்கல் முனிசிபாலிட்டியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் 22வது வார்டு உறுப்பினர் தனசேகரன், 25வது வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி ஆகியோர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே நாமக்கல்லில் 37 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 5 முனிசிபாலிட்டிகளில் உள்ள 151 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 704 பேர் போட்டியில் உள்ளனர். நாமக்கல் நகராட்சியில் 99,261 வாக்காளர்கள், திருச்செங்கோடு 79,889, ராசிபுரம் 40,960, குமாரபாளையம் 67,464, பள்ளிபாளையம் 37,808, என மொத்தம் 5 நகராட்சிகளில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 382 வாக்காளர்கள் உள்ளனர்.

டவுன் பஞ்சாயத்து:

ஆர்.பட்டணம் டவுன் பஞ்சாயத்து 6- வது வார்டு உறுப்பினர் பத்மா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பரமத்தி டவுன் பஞ்சாயத்து 13-வது வார்டு உறுப்பினர் மணி, பாண்டமங்கலம் டவுன் பஞ்சாயத்து 7-வது வார்டு உறுப்பினர் சிவகாமி, 10-வது வார்டு உறுப்பினர் சுகந்தி, 14-வது வார்டு உறுப்பினர் முருகேசன், 15-வது வார்டு உறுப்பினர் சோமசுந்தரம் ஆகிய 6 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 19 டவுன் பஞ்சாயத்துக்களில் மொத்தம் உள்ள 294 வார்டுகளில் 6 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 288 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1044 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். 19 டவுன் பஞ்சாயத்துக்களில் மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 869 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்குச்சாவடிகள் :

நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 5 நகராட்சிகள், 19 டவுன் பஞ்சாயத்துக்களில் மொத்தம் உள்ள 439 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1748 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 5 லட்சத்து 57 ஆயிரத்து 251 பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 5 நகராட்சிப்பகுதிகளில் 365 ஓட்டுச்சாவடிகளும், 19 நகராட்சிப்பகுதிகளில் 324 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள 74 ஓட்டுச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு வெப் ஸ்ட்ரீமிங் முறையில் கண்காணிக்கப்படுகிறது. அங்கு நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் அங்கு சென்றுவிட்டனர். ஓட்டுப்பதிவுக்கு தேவையான எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

Updated On: 18 Feb 2022 10:00 AM GMT

Related News