சிறுபான்மை சமூகத்தினருக்கு டாம்கோ மூலம் கடன் உதவி : ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு டாம்கோ மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது.

Update: 2023-06-01 11:00 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.

நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு டாம்கோ மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களின்கீழ், தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறு தொழில் கடன்,

கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படுகிறது. தனி நபர் கடனாக திட்டம் 1-ன் கீழ் கடன் பெற விரும்பும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டு வருமானம் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்திற்கு மிகாமலும் இருக்கு வேண்டும். திட்டம் 2-ன் கீழ் கடன் பெற விரும்புபவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 1-ன் கீழ் ரூ. 20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ரூ. 30 லட்சம் அதிகபட்சமாக கடன் வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டிற்கு 6 முதல் 8 சவீதம் வரை விதிக்கப்படும்.

சுய உதவிக்குழு கடன் ரூ. 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு 7 முதல் 8 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும். கல்விக்கடன் ரூ. 20 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு 3 முதல் 8 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும். கைவினைஞர்களுக்கு ரூ. 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்கு 4 முதல் 6 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படும்.

விருப்பமுள்ள சிறுபான்மை சமூகத்தினர், அதற்கான விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்கவேண்டும். கடன் மனுக்களுடன், தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது , சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஜெராக்ஸ் காப்பிகளை சமர்ப்பிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்த கடன் உதவியை பெற்று பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News