நாமக்கல் நகருக்கு ரூ. 197 கோடி மதிப்பில் அவுட்டர் ரிங் ரோடு: சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

நாமக்கல் நகருக்கு அவுட்டர் ரிங் ரோடு அமைக்க ரூ. 197 கோடி நிதி ஒதுக்கி சட்டசபையில் அறிவித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு, ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-01 11:45 GMT

நாமக்கல் ராஜ்யசபா எம்.பி.,ராஜேஷ்குமார்.

இதுகுறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திட, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2006 -2011ம் ஆண்டில், திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, நாமக்கல் அவுட்டர் ரிங் ரோடு திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் அந்த திட்டம் கைவிடப்பட்டது. மேலும், தற்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்ற, ஸ்டாலின் அறிவித்த, நாமக்கல்லுக்கு புதிய புறநகர் பஸ் நிலையம் திட்டம், நாமக்கல் ரிங் ரோடு திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது. தற்போது, நாமக்கல் சேலம் ரோட்டில், முதலைப்பட்டி அருகில் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு அணுகு சாலையும் மற்றும் நாமக்கல் ரிங் ரோடு முழுவதுமாக சேலம் ரோட்டில் துவங்கி, சேந்தமங்கலம் ரோடு, துறையூர் ரோடு, திருச்சி ரோடு ரோடுகளை இணைத்து, பரமத்தி ரோடு வரை, முதலைப்பட்டி முதல் தொட்டிப்பட்டி வரை 22 கி.மீ தூரம் ரிங் ரோடு அமைப்பதற்கு, ரூ. 197 கோடி நெடுஞ்சாலைத்துறையால் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை இன்று சட்டசபையில் நடைபெற்ற மானிய கோரிக்கையின் போது, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். மேலும், நாமக்கல் ரிங் ரோடு அடுத்த ஆண்டுக்குள் அமைக்கப்படும் என்றும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடும் செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். நாமக்கல் பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த தமிழக முதல்வருக்கும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கும், நாமக்கல் பகுதி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News