நாமக்கல்லில் எண்ணும் எழுத்தும் திட்ட வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்

நாமக்கல்லில், எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து, வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கியது.

Update: 2023-03-19 03:45 GMT

கொரோனா காலத்தில், பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை ஈடுகட்ட, தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டம் எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் தொலைநோக்கு, 2025-க்குள், தமிழகம் முழுவதும் உள்ள அனைவரும், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதுதான். தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும், எட்டு வயதிற்குள், பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படைக் கணிதச்செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.

கல்வியில், இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக, அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூகத் திறன்களுடன் இணைந்த மொழிக் கற்பித்தலில், மாணவர்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு, ஒருங்கிணைத்து அளிக்கப்பட வேண்டும் என்பதை, எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில், ஒன்று முதல், மூன்று வகுப்புகளில், தமிழ், ஆங்கிலம், கணித பாடங்கள் சூழ்நிலையியல் பாடக்கருத்துக்களுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, நாமக்கல் மாவட்டத்தில், எண்ணும் எழுத்தும் திட்டத்தினால், குழந்தைகளின் கற்றல் நிலைகளையும், ஆசிரியர்களுடன் ஏற்பட்டுள்ள இணக்கத்தையும், பெற்றோர்களிடம் கொண்டு செல்லும் விதமாக, எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்ற திட்டத்திற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவங்கப்பட்டது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுப்ரமணியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வாகன பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர்கள் பாஸ்கரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழிப்புணர்வு வாகனத்தில், இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள், கலை குழுவினர், நாமக்கல், ராசிபுரம் ஆகிய பகுதிகளில், திட்டம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு, வரும் 21 ஆம் தேதி, மீண்டும் நாமக்கல் வந்தடையும். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி செய்துள்ளார்.

Tags:    

Similar News