நாமக்கல்லில் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண் கண்காட்சி

நாமக்கல்லில் நாளை பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண் கண்காட்சி நடைபெறவுள்ளது

Update: 2023-03-27 03:30 GMT

நாமக்கல்லில் பாரம்பரியம் மிக்க, உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நாளை நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வேளாண்மையில் பாரம்பரியமிக்க உள்ளூர் ரகங்களைக் கண்டறிந்து, அந்த ரகத்தை மேம்பாட்டிற்கான, ஆய்வுகளில் பயன்படுத்தி நமது பகுதிக்கேற்ற சிறந்த ரகங்களை உருவாக்கும் வகையில் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் ஆண்டுக்கு 3 முறை நடத்திட தமிழ்நாடு அரசு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சிறந்த பண்புகளைக் கொண்ட பல்வேறு பாரம்பரியம் மிக்க உள்ளூர் பயிர் ரகங்களை கண்டறிந்து பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி, நாளை 28ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, நாமக்கல் மோகனூர் ரோட்டில், லத்துவாடியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (கேவிகே) நடைபெற உளளது. வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அனுமதி அளித்துள்ளார்.

மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், திரளாக கலந்துகொண்டு, தங்கள் பகுதி பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் வேளாண் விஞ்ஞானிகள், வீரியமிக்க குணங்களை கொண்ட ரகங்களை உருவாக்கிட பயனுள்ளதாக இருக்கும். ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் விளைந்த, சிறந்த மருத்துவ பண்புகளைக் கொண்ட, பாரம்பரிய மிக்க, உள்ளூர் உயர் ரகங்களை காட்சி பொருளாக வழங்கி கண்காட்சியில் பங்கு கொண்டு, விவசாயம் காத்து உணவு உற்பத்தியை பெருக்கிட உதவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News