/* */

பவுர்ணமி திருவிளக்கு வழிபாட்டில் இத்தனை ஐதீகமா? தெரிந்து கொள்ளுங்கள்

பவுர்ணமி திருவிளக்கு வழிபாட்டில் இத்தனை ஐதீகம் இருக்கிறதா? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

பவுர்ணமி திருவிளக்கு  வழிபாட்டில் இத்தனை ஐதீகமா? தெரிந்து கொள்ளுங்கள்
X

குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் சவுண்டம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி பவுர்ணமி திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் சவுண்டம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி பவுர்ணமி திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் பெண்கள் பெருமளவில் பங்கேற்று, அரச்சகர் மந்திரங்கள் ஓத, அனைவரும் திரும்ப சொல்லி மஞ்சள், அரிசி, பூக்கள் ஆகியவற்றை தீபங்கள் மேல் போட்டு வணங்கி, பக்தி பாடல்கள் பாடினார்கள். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவிளக்கு பலன்கள் குறித்து அர்ச்சகர் ஜெகதீஸ்வரன் கூறியதாவது:-

இந்து சமயத்தில் திருவிளக்கு வழிபாடு உன்னதமான இடத்தைப் பிடித்துள்ளது. எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்தில் எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாடாகும். ஆதியில் வேதரிஷிகள் ஹோமம் வளர்த்து இறைவனை வழிபட்டனர். இந்த முறையே தற்போது தீப வழிபாடாக மாறியிருக்கிறது. விளக்கு வழிபாடு சுற்றுப்புறத்தில் இருக்கும் இருளை அகற்றுவதோடு நம் மனதின் இருளையும் அகற்றுகிறது. வீட்டின் வாசலை மெழுகி மாக்கோலம் இட்டு அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து, பின் அதனை வீட்டு பூஜையறையில் வைத்தால் அவ்விளக்குடன் மகாலட்சுமியும் நம் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம். தற்போது பெண்கள் குழுவாக சேர்ந்து கோயில்களில் விளக்கு வழிபாடு செய்வது பிரபலமடைந்து வருகிறது. இந்த விளக்கு வழிபாட்டால், பல ஹோமங்களை நடத்துவதால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விளக்கை ஏற்றி வழிபடாதவர்கள் அவ்விளக்கு அணைந்து விடாமல் பாதுகாக்கவாவது செய்யலாம்.

பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். மாதங்களுக்கேற்ப இப்பலன்கள் வேறுபடுகின்றன. சித்திரை - தானிய வளம் உண்டாகும்.வைகாசி - செல்வம் செழிக்கும். ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும். ஆடி - ஆயுள்பலம் கூடும். ஆவணி - புத்தித்தடை நீங்கும் புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும் ஐப்பசி - நோய்கள் உண்டாகும். கார்த்திகை - நற்பேறு கிட்டும். மார்கழி - ஆரோக்கியம் கூடும். தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும். மாசி - துன்பங்கள் நீங்கும். பங்குனி - தர்மசிந்தனை வளரும்.

விளக்குகளை நன்றாக கழுவி அதனை சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்கவேண்டும். பூஜைக்கு உடைந்த, கீறல் விழுந்த விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. திரி ஏற்றியபின்பு விளக்கு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். விளக்கிற்கு பூமாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்டலாம். சுடரில் இருந்து பத்தி, சூடத்தை கண்டிப்பாக கொளுத்தக் கூடாது. எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு பக்கம் பார்த்து வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும். விளக்குகளை தீக்குச்சியால் நேராக பற்ற வைக்காமல் துணைவிளக்கின் உதவியோடு மட்டுமே ஏற்ற வேண்டும். பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை எல்லோரும் சேர்ந்து ஒரே மாதிரியான குரலில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.

வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நீண்ட நேரமாக எரிந்ததால் அது அணையும் நிலையில் மிகக்குறைவான சுடருடன் எரிந்தது. அவ்விளக்கில் இருந்த நெய்யை உண்பதற்காக ஒரு எலி தீபத்தை நோக்கி தாவியது. அப்போது எலி தன்னை அறியாமலேயே திரியை தூண்டிவிட்டது. இந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தி மன்னனாக பிறந்தது. வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தால் மோட்சமும் அடைந்தது. தெரியாமல் திரியை தூண்டிவிட்டதற்கே ஒரு எலிக்கு ராஜயோகம் கிடைத்தது என்றால் நாம் இறைவனை எண்ணி ஏற்றும் விளக்கிற்கு என்ன பலன் கிடைக்கும்.

நாம் வாழும் உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலும் ஐம்பொறிகளால்தான் இயங்குகிறது. பெண்கள் வைத்திருக்க வேண்டிய நற்குணங்களும் ஐந்து. இவ்வாறு, ஐந்து என்ற எண் நம் வாழ்க்கையில் பிரதானமாக இருக்கிறது. இதனை உணர்த்தும் விதமாகத்தான் குத்து விளக்கை ஐந்து திரியுடன் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டது.

திருவிளக்கு பூஜைக்கு பயன்படும் குத்துவிளக்கின் மீது எட்டு இடங்களில் பொட்டு வைக்கவேண்டும் என்பது நியதி. இதற்கு காரணம் இருக்கிறது. உச்சியில் ஒன்று, அதற்கு கீழ் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் குறிக்கும் பொருட்டு மூன்று பொட்டுகள், அதனையடுத்து கைகளாக கருதி இரண்டு மற்றும் திருவடியில் ஒன்று என பொட்டு வைக்க வேண்டும். இதனால் விளக்குபூஜை பரிபூரணமானதாய் இருக்கும் என்பதாக ஐதீகம்.

முதலில் பூஜை செய்யும் இடத்தை மெழுகியும், விளக்கை நன்கு துலக்கியும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பூஜை செய்வதற்கு முன்பு அவ்விடத்தில் தலைவாழை இலையை விரித்து, அதில் முனை முறியாத அரிசியை (அட்சதை) பரப்பி, அதன் மீது விளக்கை வைத்து சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்பு துணை விளக்கினால் திரியை ஏற்ற வேண்டும். எச்செயலைச் செய்யும் முன்பும் விநாயகரை வழிபடவேண்டும் என்பதால் மஞ்சளில் சிறிய விநாயகரைப் பிடித்து ஒரு வெற்றிலையில் வைத்து அவரையும் அலங்கரிக்க வேண்டும். பின்பு பூஜைக்கு தேவையான பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு, விளக்கை வணங்கி விட்டு அமரவேண்டும். பின் ஓம் ஒளிர்வளர் விளக்கே போற்றி என்று சொல்லிக்கொண்டே திரியை ஏற்ற வேண்டும். பின் தொடர்ந்து அம்பாள் துதிப்பாடல்களை பாடியபடி பூஜையை துவங்கிவிடலாம்.

விளக்கு பூஜைக்கு தயாராகும் முன்பு பொருட்களை முன்னதாகவே தயாராக வைத்துக்கொள்ளுங்கள். திருவிளக்கு, தேவையான எண்ணெய், சாம்பிராணி, கற்பூரம், கோலமிடுவதற்கு பச்சரிசி மாவு, வாழை இலை, சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி, மாலை, அட்சதை அரிசி, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கிழங்கு, நைவேத்திய பொருட்கள், துணை விளக்கு, தீர்த்த பாத்திரம், தாம்பாளம் மற்றும் அமர்ந்து கொள்வதற்கு சிறிய விரிப்பு.விளக்கு துதிப்பாடல் பாடி பூஜை செய்ய வேண்டும்.

வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும் இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும். மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும். ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 8 Dec 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!