ஈரோடு: எலவமலை ஊராட்சியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம்
எலவமலை மூலப்பாளையத்தில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.
எலவமலை ஊராட்சியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு வட்டாரம் சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட எலவமலை ஊராட்சி மூலப்பாளையம் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம் நேற்று (ஜன.23) நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், காசநோய் ஒழிப்பில் பொது மக்களின் பங்கு குறித்து தெரிவிக்கப்பட்டது.
மேலும், டெங்கு காய்ச்சல் பரவும் விதம் கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு சுய மருத்துவம் தவிர்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட நோக்கம் மற்றும் பயன்கள், சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்த நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இந்த முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், காசநோய் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், சுதன்சர்மா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ரகு, ராஜா, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்கள், நடமாடும் மருத்துவக் குழுவினர்கள், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 85 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை, சளிப் பரிசோதனை, இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu