/* */

அரியலூரில் தூய்மைப் பணியாளர்களின் நலன்கள் பற்றிய ஆய்வு கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களின் நலன் பற்றி ஆய்வு கூட்டம் ஆணையர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

அரியலூரில் தூய்மைப் பணியாளர்களின் நலன்கள் பற்றிய ஆய்வு கூட்டம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணயாளர்களின் நலன் பற்றிய ஆய்வு கூட்டம் நடந்தது.

இந்தியாவில் தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையம் 1993-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, 1994-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தூய்மைப்பணியாளர்கள் நிரந்தர மற்றும் தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தூய்மைப்பணியாளர்களின் முன்னேற்றம், நலத்திட்ட உதவிகள், குறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தூய்மைப்பணியாளர்களிடம் நேரடியாக கேட்டறிந்து, அதனை சரிசெய்யும் பணிகளை தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்திலுள்ள தூய்மைப்பணியாளர்களின் முன்னேற்றம் மற்றும் குறைகளை கேட்டறிந்து, நிவர்த்தி செய்யும் வகையில் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில், தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையத்தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசு அலுவலர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் ஆகியவற்றில் பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சம்பளம், விடுமுறை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், வேலை செய்யும் நேரம், தாட்கோ மூலம் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், நிரந்தர மற்றும் தற்காலிகப் பணியாளர்களின் எண்ணிக்கை, கருணை அடிப்படையில் பணி நியமனம், பணியிடத்தில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் குறைகள், கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து தூய்மைப்பணியாளர்களிடம் மாண்புமிகு தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையத்தலைவர் எம்.வெங்கடேசன் நேரடியாக கேட்டறிந்து, ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்வில், தூய்மைப்பணியாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் சம்பளம் வழங்கவும், பணியின்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும், விபத்துக்காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு எடுத்தல், அடையாள அட்டை வழங்குதல், தாட்கோ மூலம் சுயதொழில் கடன், கல்வி உதவித்தொகை வழங்குதல், நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேருதல், தூய்மைப்பணியாளர்களின் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தல், குறைகள் மற்றும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்தல் போன்ற பல்வேறு பணிகளை சிறப்பாக மேற்கொள்வதுடன், அரியலூர் மாவட்டத்தில் உள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்று சேர்வதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையத்தலைவர் எம்.வெங்கடேசன் அறிவுறுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையத்தலைவர் கூறும்போது

தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையத்தின் சார்பில் தமிழகத்தில் இரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டு, அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொரு மாதமும் உரிய நாட்களில் தூய்மைப்பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், சம்பளத்தை சம்மந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் மூலம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், தூய்மைப்பணியாளர்களின் ஏனைய கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தூய்மைப்பணியாளர்கள் பணிகளில் ஒப்பந்தமுறையை ரத்து செய்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே தூய்மைப்பணியாளர்களுக்கு நேரடியாக சம்பளம் வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசே நேரடியாக சம்பளம் வழங்கும் வகையில் தூய்மைப்பணியாளர்களின் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படும். அதுபோன்று அண்டை மாநிலங்களைப்போல் தமிழகத்திலுள்ள தூய்மைப்பணியாளர்களுக்கும் மாத சம்பளம் உயர்த்தி வழங்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூய்மைப்பணியாளர் வாரியம் உள்ளது. எனினும் மாநில அளவிலான ஆணையம் அமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் ஒன்பது மாநிலங்களில் மேற்கண்ட ஆணையம் இயங்கி வருகிறது. ஆணையம் அமைப்பதன் மூலம் உரிய நேரத்தில் கூட்டங்கள் நடத்தலாம் என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், திட்ட அலுவலர் (மகளிர்திட்டம்) சிவக்குமார், உதவி இயக்குநர்கள் காளியப்பன் (பேரூராட்சிகள்), சந்தானம் (ஊராட்சிகள்), மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பி.மெரினா, தாட்கோ மேலாளர் மதன், நகராட்சி ஆணையர்கள் சித்ராசோனியா (அரியலூர்), சுபாஷினி (ஜெயங்கொண்டம்) மற்றும் அரசு அலுவலர்கள், தூய்மைப்பணியாளர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 1 March 2022 9:47 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்