ஆயுதபூஜை, விஜயதசமியை யொட்டி நாமக்கல்லில் பூக்கள் விலை பல மடங்கு உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி நாமக்கல்லில் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.

Update: 2022-10-04 02:49 GMT

நவராத்திரி, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, நாமக்கல் பகுதியில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், அணியாபுரம், மோகனூர், வளையப்பட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ரோஜா, மல்லிகை, சம்மங்கி, சாமந்தி, அரளி, முல்லை உள்ளிட்ட பல்வேறு பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றை அறுவடை செய்து, நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள தினசரி ஏல மார்க்கெட்டுக்கு விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலம் மூலம் பூக்களை கொள்முதல் செய்து எடுத்துச் செயல்கின்றனர். முக்கிய விசேஷ நாட்களில் பூக்களில் விலை உயரும். மற்ற நாட்களில், வழக்கமான விலைக்கு பூக்கள் விற்பனை செய்யப்படும். தற்போது, நவராத்திரி, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமியை முன்னிட்டு, பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நாட்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், கடைகள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கார், லாரி உள்ளிட்ட வாகனங்களையும் பூ மாலைகளால் அலங்கரித்து வழிபடுவது வழக்கம். இதனால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், தற்காலிக பூக்கடைள் அமைத்து இரவு பகலாக வியாபாரிகள் பூக்களை தொடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதையொட்டி பூக்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த வாரம், ஒரு கிலோ ரூ. 200 விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ நேற்று ஒரு கிலோ ரூ. 800க்கு விற்பனையானது. மேலும், ஒரு கிலோ ரூ. 160 ரூபாய்க்கு விற்பனையான சாமந்திப்பூ நேற்று ரூ. 380க்கும்,. ரூ. 120க்கு ஏலம்போன சம்பங்கி ரூ. 360க்கும், ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி ரூ. 420க்கும், ரூ. 80 க்கு விற்பனையான விரிச்சிப்பூ ரூ. 120 ரூபாய்க்கும் விற்பனையானது. கோழி கொண்டை பூ ஒரு கட்டு ரூ. 20ல் இருந்து 40 ஆகவும், ரூ. 160க்கு விற்பனை செய்யப்பட்ட கலர் ரோஜாப்பூ ரூ. 400க்கும், ரூ. 120க்கு விற்பனையான சிகப்பு ரோஜா ரூ. 200க்கும் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து, பூ வியாபாரிகள் கூறும்போது தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பூக்கள் செடியிலேயே அழுகிப் போகிறது. இதனால் நாமக்கல், சேலம் , தர்மபுரி, கிருஷ்ணகிளி உள்ளிட்ட மாவட்டங்களில் பூக்கள் உற்பத்தி கடுமையாக சரிந்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நாட்களில் பொதுமக்கள் அதிக அளவில் பூக்களை வாங்குவார்கள். இந்த ஆண்டு பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது என கூறினார்.

Tags:    

Similar News