தள்ளுவண்டி டிபன் கடை உரிமையாளர் வீட்டில் 21 பவுன் நகை, பணம் கொள்ளை

தள்ளுவண்டி டிபன் கடை உரிமையாளர் வீட்டில் 21 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2024-05-07 02:35 GMT

கொள்ளை நடந்த வீட்டில் பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.

தள்ளுவண்டி டிபன் கடை உரிமையாளர் வீட்டில் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்து, 21.50 பவுன் நகை, 7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல், மோகனூர் ரோடு, கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் செந்தில் (வயது48). அவரது மனைவி நிர்மலா. இந்த தம்பதியருக்கு, பிரகதீஷ் என்ற மகன் உள்ளார். செந்தில், தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த, 5ம் தேதி மாலை 4.30 மணிக்கு, வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவி, மகனுடன் செந்தில் மகாதேவி கிராமத்தில் உள்ள மருமகன் வீட்டுக்கு, திருவிழாவிற்கு சென்று விட்டனர்.

அடுத்த நாள் இரவு, 10.45 மணிக்கு வீட்டுக்கு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 21.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ. 7 லட்சம் கொள்ளை யடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து, செந்தில், நாமக்கல் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த, 30ம் தேதி, நாமக்கல் நல்லிபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் கன்டக்டர் பத்மநாபன் (62) என்பவரது வீட்டில், பகல் நேரத்தில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து, அதில் இருந்த, 34.50 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இந்த குற்றவாளிகளை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. கொள்ளையடித்தவர்கள் யார் என்ற துப்பும் கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் டிபன் கடை உரிமையாளர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பணம், நகை கொள்ளையடித்த சம்பவம் மாவட்ட மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News