ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க பிரபல கார் நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு

ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க பிரபல கார் நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2024-05-07 02:36 GMT

அரசு அங்கீகாரம் பெறாத கார்களை விற்பனை செய்வதற்கு, மாருதி சுசுகி கம்பெனிக்கு தடை விதித்து, நாமக்கல் நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்க ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

கோவை, வடவள்ளியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது42). அவர், 2022ல், கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் பிரபல மாருதி கார் கம்பெனி மற்றும் அதன் டீலர் மீது ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ஓட்டல் தொழில் செய்து வந்ததாகவும், கொரோனா பாதிப்பால் ஓட்டல் தொழிலை விட்டு கார் ஒன்று வாங்கி வாடகைக்கு ஓட்டலாம் என முடிவு செய்து, மாருதி சுசுகி கார் உற்பத்தி நிறுவனத்தின், கோவை டீலரை அணுகினேன்.

2022, ஜூன் முதல் வாரத்தில், வினியோகஸ்தரிடம், ரூ. 6 லட்சத்து 98 ஆயிரம் செலுத்தி காரை முன்பதிவு செய்தேன். பணம் செலுத்திய ஓரிரு நாளில் காரை டெலிவரி தருவதாக தெரிவித்த டீலர், 4 மாதங்கள் கழித்துதான் அந்த காரை வழங்கினார். அதனால் ஏற்பட்ட சிரமங்களுக்காக, இழப்பீடாக ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். விரைவான விசாரணைக்காக, இந்த வழக்கு, கடந்த, பிப்ரவரி மாதம் நாமக்கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டது. சாகுல் ஹமீது முன்பதிவு செய்திருந்த காருக்கு, மாநில போக்குவரத்து அமைப்பின் டிசைன் அங்கீகாரம் கிடைக்காததால், காரை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

அதனால், காரை வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல என, கார் வினியோகஸ்தர் தரப்பில் வாதிடப்பட்டது. கார்களை தாங்கள் உற்பத்தி செய்து டீலருக்கு வழங்கி விடுகிறோம். தங்களுக்கு காரை முன்பதிவு செய்தவர் வாடிக்கையாளர் அல்ல. காரின் டீலர்தான் விற்பனை தொடர்பான பிரச்னைகளுக்கு பொறுப்பானவர். தங்கள் தரப்பில் எவ்வித குறைபாடும் இல்லை என, மாருதி கார் உற்பத்தி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை முடிந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர், இன்று தீர்ப்பளித்தனர்.

அதில், மாநில போக்குவரத்து அமைப்பின் அங்கீகாரத்தை பெறாமல் காரை விற்பனை செய்ய டீலருக்கு முன்பதிவு செய்யும் அதிகாரத்தை கார் உற்பத்தியாளர் வழங்கியதும், அங்கீகாரம் இல்லாத காருக்கு முழு தொகையை வினியோகஸ்தர் பெற்றுக் கொண்டதும், பணத்தை பெற்றுக் கொண்டு, 4 மாதம் காலதாமதம் செய்து வழங்கியதும், நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாடாகும்.

இதனால், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு, இழப்பீடாக கார் உற்பத்தி நிறுவனம், காரின் டீலர் ஆகியோர், தலா ரூ. 2 லட்சம் வீதம், மொத்தம் ரூ. 4 லட்சத்தை 4 வாரத்திற்குள் வழங்க வேண்டும். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட கார் உற்பத்தி நிறுவனம் தயாரிக்கும் எந்த ஒரு காருக்கும், டிசைன் அங்கீகாரத்தை மாநில போக்குவரத்து அமைப்பில் பெறாமல் விற்பனைக்கு, முன்பதிவு செய்ய தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிடப்பட்டது.

Tags:    

Similar News