போக்சோ வழக்கில் கைதான மருத்துவரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

11 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ரஜினிகாந்த் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-15 16:00 GMT

நீதிமன்ற காவல் நீட்டிப்புக்கு பிறகு சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் மருத்துவர் ரஜினிகாந்த்.

கரூரில் 11ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாய் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி கரூரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் வழக்கில் பிரபல எலும்பு முறிவு மருத்துவர் ரஜினிகாந்த் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து இரண்டு நாட்கள் தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நசீமா பானு மருத்துவர் ரஜினிகாந்த்துக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். கடந்த 1 ந்தேதி மேலும் 15 நாள் நீதிமன்றக் காவலை நீட்டித்த நிலையில் இன்றுடன் 30 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்தது.

இதையடுத்து இன்று மீண்டும் மருத்துவர் ரஜினிகாந்த் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நசீமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி நசீமா மருத்துவர் ரஜினிகாந்தின் நீதின்ற காவலை மேலும் 15 நாளுக்கு நீட்டித்து உத்தரவிட்டார். எனவே இந்த மாதம் 29ம் தேதி வரை அவருக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Tags:    

Similar News