கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது குண்டர் சட்டம்: கரூர் எஸ்.பி. எச்சரிக்கை

கந்து வட்டி வசூலிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என கரூர் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2024-05-07 03:44 GMT

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன்.

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. முறையாக அனுமதி பெறாமலும், பைனான்ஸ் தொழில் விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்வது சட்டப்படி குற்றமாகும் என கரூர் மாவட்ட எஸ்.பி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கரூர் மாவட்டத்தில் முறையாக அனுமதி பெறாமலும், முறையாக பதிவு செய்யாமலும், பைனான்ஸ் தொழில் விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்வதும், பணம் கொடுக்காதவர்களை அடித்து துன்புறுத்துவது போன்ற சட்டவிரோத குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தெரியவருகிறது. இதில் அதிகம் சிறு குறு வணிகர்கள், சிறு தொழில் செய்பவர்கள், தினசரி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்துபவர்கள் போன்றோர்கள் அவர்களின் அவசர தேவைக்காக கடனாக பணத்தை தனிநபரிடமும், தனிநிறுவனங்களிலும் பெறும்பொழுது கடன் கொடுப்பவர்கள் ஆசை வார்த்தை கூறி வெற்று பத்திரத்தில் கையெழுத்தை பெற்று பணத்தை கொடுத்துவிட்டு பின்பு பணத்தை வசூலிக்கும்பொழுது சட்டத்திற்கு புறம்பாக அதிகப்படியான வட்டியை வசூல் செய்து வருகிறார்கள்.

இது போன்று கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அதிகப்படியான வட்டியை வசூலிப்பது தமிழ்நாடு கந்து வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003 படி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவதுடன், அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை செய்யப்படுகிறது.

அதேபோல் பணம் வாங்குபவர்களும் ஆவணங்களை படித்துப்பார்த்து கையெழுத்திட்டு பணம் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் சட்ட விரோதமாக கந்துவட்டி வசூலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக தொலைபேசி எண்100 அல்லது 04324-296299 என்ற எண்ணிற்கோ நேரடியாக தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News