வாக்குச்சாவடி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்

வாக்குச்சாவடி பணிகளை பார்வையிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-18 10:29 GMT

வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பொருட்களை கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் அதிகாரியும் கரூர் மாவட்ட கலெக்டருமான தங்கவேல் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து கலெக்டர் தங்கவேல் தெரிவித்ததாவது.-

கரூர் மக்களவை தொகுதிக்கு பொதுத் தேர்தலை முன்னிட்டு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கரூர் மக்களவை தொகுதியில் மொத்தம் 1,670 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குப் பதிவினை செலுத்தும் வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடி மையங்கள் அனைத்திலும் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு, தேவையான மின்சார வசதி கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் சாய்வுதளம் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தேவையான இடங்களில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையம், அரவக்குறிச்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள பொருட்கள் வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணியினையும் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க எதுவாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவிபெட் இயந்திரங்கள் அனைத்தும்  வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டு விட்டன.

Tags:    

Similar News