வீடு, உதவித்தொகை, கல்லூரியில் இடம் உள்ளிட்ட உதவியை வழங்கிய ஆட்சியர்

இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சாலினியின் கால் துண்டிக்கப்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

Update: 2021-12-28 11:27 GMT

நலத்திட்ட உதவிகளை வழங்கும் கலெக்டர் பிரபு சங்கர்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் சோமூர் ஊராட்சி எழுத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சாலினி(17). இவரது தந்தை கோவிந்தராஜ் பெயிண்டராக பணிபுரிகிறார். தாய் தனலட்சுமி கூலித்தொழிலாளி. இந்நிலையில் தனது மகள் ஷாலினியை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர்.

பின்னர் சாலினியின் பாட்டி ஊரான திண்டுக்கல் மாவட்டத்தில் காசிபாளையம் என்கின்ற ஊரில் மேல்நிலைக் கல்வி படித்து வந்தார். 4 மாதங்களுக்கு முன்பு கடந்த செப்டம்பர் 19ம் தேதியன்று திண்டுக்கல் மாவட்டம் காக்கா தோப்பு பிரிவு அருகில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சாலினியின் கால் துண்டிக்கப்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

தனக்கு உயர்கல்வி பயில உதவி செய்திட வேண்டும் என்றும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவிட வேண்டும் என்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கரிடம் கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து  சாலினியின் குடும்பத்தினருக்கு கரூர் சணப்பிரட்டியில் அமைந்துள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வீடும், மாதந்தோறும் ரூ.௧௦௦௦ உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், தாந்தோன்றிமலை அரசுக்கல்லூரியில் இளங்களை பயில்வதற்கான இடமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார். 

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மந்திராச்சலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சைபுதீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பாலாஜி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News