சேலம் - நாமக்கல் இடையேயான பேருந்து கட்டணம் ரூ. 3 குறைப்பு - பயணிகள் மகிழ்ச்சி!
நாமக்கல் : சேலம் - நாமக்கல் இடையேயான பேருந்து கட்டணம் ரூ. 3 குறைப்பால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனார். இந்தக் கட்டணம் குறைப்பு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
நாமக்கல், முதலைப்பட்டிபுதூரில் ரூ. 20 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையம், கடந்த ஆண்டு அக். 22-இல் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நவ. 10 முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
புதிய பேருந்து நிலையம்
புகர் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், நகரப் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், புறவழி சுற்றுவட்டச் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், திருச்சி, துறையூர், சேந்தமங்கலம், கொல்லிமலை செல்லும் பேருந்துகள் மட்டும் பழைய பேருந்து நிலையம் வழியாக செல்கின்றன.
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ. முன்னதாக புதிய பேருந்து நிலையம் உள்ளது. ஆனால், சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு விரைவுப் பேருந்துகளில் ரூ. 45 கட்டணம், சாதாரண மற்றும் தனியாா் பேருந்துகளில் ரூ. 36 கட்டணம் வசூலிக்கப்பட்டன. 7 கி.மீ. முன்னதாக உள்ள பேருந்து நிலையத்துக்கும் ரூ. 45 கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு பயணிகள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். அதனால், அவா்கள் புதிய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து ரூ. 10 கட்டணம் செலுத்தி நாமக்கல் நகரில் உள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு சென்று வந்தனா்.
பேருந்து கட்டண விவரம்
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா், போக்குவரத்துக் கழக அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சில மாதங்களுக்கு முன்னா் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, கட்டணம் குறைப்பு செய்வது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு, ஆட்சியா் கடிதம் அனுப்பியிருந்தாா். அதனை பரிசீலித்த போக்குவரத்துக் கழகம், சேலம் - நாமக்கல் இடையே ரூ. 45-ஆக இருந்த கட்டணத்தை ரூ. 42-ஆக குறைத்துள்ளது.
சாதாரண பேருந்துகளில் ரூ. 36 என்பதை ரூ. 33-ஆகவும், ஆண்டகளூா்கேட் முதல் நாமக்கல் வரை ரூ. 22 என்பது ரூ. 19-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.சேலத்தில் இருந்து நாமக்கல் பழைய பேருந்து நிலையம் வரை செல்ல ரூ. 47-ம், பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் வருவதற்கு ரூ. 19-ம் வசூலிக்கப்பட்ட நிலையில், ரூ. 3 உயா்த்தப்பட்டு தற்போது ரூ. 22-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்டண நடைமுறை
இந்த புதிய கட்டண நடைமுறை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண குறைப்பால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் விளக்கம்
மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்பேரில் கட்டண குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. நடத்துநர்கள் பயணச்சீட்டுக் கருவியை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த கட்டண குறைப்புக்காக அவற்றில் சில மாறுதல்கள் செய்யப்பட உள்ளன. அதனால், கைகளால் கிழித்துக் கொடுக்கும் பயணச்சீட்டை வழங்கி வருகின்றனர்.
நடத்துநர்களுக்கு எச்சரிக்கை
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தினசரி 50-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. நடத்துநர்கள் தங்களது பணப்பையை மூடாமல் திறந்தபடி வைத்திருப்பதைக் கண்ட சிலர், நடத்துநரின் கவனத்தை திசைதிருப்பி பணத்தை திருடிச் செல்லும் போக்கு காணப்படுகிறது. இதனால் நடத்துநர்கள் தங்களது பயணச்சீட்டு மற்றும் வசூல் பணத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu