வி.ஏ.ஓ. மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி காத்திருப்பு போராட்டம்

வி.ஏ.ஓ. மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

Update: 2022-09-28 12:30 GMT

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ளது நாரைக்கிணறு பஞ்சாயத்து. அங்குள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டிருந்தது. தண்ணீர் தொட்டி கட்டி 10 நாட்களே ஆன நிலையில் திடீரென்று இடிந்து விழுந்ததில் அதே பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து பஞ்சாயத்து தலைவர் ரங்கசாமி ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கலையரசு நாரைக்கிணறு ஊராட்சி செயலாளர் கருணாகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் தண்ணீர் தொட்டி கட்ட அனுமதி வழங்கியது குறித்து, நாமக்கல் சப்கலெக்டர் மஞ்சுளா, நாரைக்கிணறு கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜுக்கு 17 பி மெமோ வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த குற்ற குறிப்பாணையை திரும்பப் பெற வேண்டி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் கிராம நிர்வாகஅலுவலர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 130 க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News