நாமக்கல் அருகே ஆபத்து பயணம் மேற்கொள்ளும் அரசு பள்ளி மாணவர்கள்

நாமக்கல் அருகே ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால், அரசு பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்

Update: 2022-04-13 12:15 GMT

நாமக்கல் அருகே பேருந்து வசதி இல்லாததால், எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், முண்டியடித்துக்கொண்டு பஸ்சில் ஏறுகின்றனர்

நாமக்கல்–திருச்செங்கோடு ரோட்டில், கலெக்டர் அலுவலகம் அருகில், எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். குறிப்பாக, சுங்கக்காரன்பட்டி, வில்லிபாளையம், திண்டமங்கலம், அண்ணாநகர், எர்ணாபுரம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த 180க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பேருந்து  மூலம் இப் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

இவ்வழியாக, பரமத்தியில் இருந்து, திருச்செங்கோடு ரோடு வழியாக, 9 ஜி என்ற அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பேருந்தை பயன்படுத்தி, பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

தினசரி காலை, மாலை என ஒரு டிரிப் மட்டுமே இந்த பேருந்து  இயக்கப்படுவதால், முண்டியடித்துக் கொண்டு சென்று பேருந்தில் ஏறி செல்லும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். அதுவும், ஒரே நேரத்தில் 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் முண்டி அடித்து ஏறுவதுடன், படியில் தொங்கியபடி ஆபத்து பயணத்தை மேற்கொள்கின்றனர்.

அதனால், தங்களது குழந்தைகள் வீடு வந்து சேரும் வரை, பெற்றோர்கள் படபடப்புடன் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம், அரசு போக்குவரத்து துறை என மாறி மாறி புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது, பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, காலை, மாலை நேரங்களில், இந்த வழித்திடத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்து துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News