பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் பூசாரிகள் பேரவை ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-20 10:45 GMT

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் பார்க் ரோட்டில் மாவட்ட பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு, கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம், கிராம கோயில் பூசாரிகள் பேரவை மாநிலத் தலைவர் கோபால்ஜி ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதையொட்டி, நாமக்கல் பார்க் ரோட்டில், கிராம கோயில் பூசாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம கோயில் பூசாரிகள் பேரவை, மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, கிராம கோயில் பூசாரிகளுக்கு வழங்கப்படும் மாத சம்பளத்தை நிபந்தனையின்றி, ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

முடங்கிக் கிடக்கும் பூசாரிகள் நலவாரியத்தை சீர்படுத்தி விரைவாக செயல்படுத்த வேண்டும் . அனைத்து கிராம கோயில்களுக்கும் கட்டணம் இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரிகள் மறைவிற்கு பின் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கணேசன், பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News