நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 60% பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை 60 சதவீதம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-09-29 03:30 GMT

இது குறித்து,  மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க விரைவான பல்வேறு நடவடிக்கைகளை, அரசு எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தொற்றின் பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதில் தடுப்பூசி முக்கிய பங்காற்றுகிறது.

முதல்வர் உத்தரவின்பேரில்,  இந்த மாதம் 12, 19, 26 ஆகிய தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் 620 நிலையான முகாம்களும், 80 நடமாடும் வாகன முகாம்களும் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட சிறப்பு முகாமில் 85,375 தடுப்பூசிகளும், 19ம் தேதி 2ம் கட்ட முகாமில் 31,448 தடுப்பூசிகளும், 26ம் தேதி 3ம் கட்ட சிறப்பு முகாமில் 59,753 தடுப்பூசிகளும் போடப்பட்டன.

மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 8,66,864 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி போட வேண்டியவர்களின் எண்ணிக்கையில் 60 சதவீதம் பேருக்கு முதல் தவணை போடப்பட்டுள்ளது. 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2,63,318 ஆக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News