நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நாமக்கல்லில் இடி மின்னலுடன் பெய்த கோடை மழையால் வெப்பம் தனிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

Update: 2024-05-06 02:45 GMT

நாமக்கல் நகரில் நேற்று இரவு கோடை மழை பெய்தது.

நாமக்கல் பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேர வெப்பநிலை 105 முதல் 108 டிகிரி வரை உள்ளதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் திணறி வருகின்றனர்.

அவசியப்பணிக்காக வெளியில் வருபவர்கள் முகத்தை துணியால் மூடிக்கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். பல இடங்களில் இளநீர், வெள்ளரிக்காய், குளிர்பானங்கள், மோர், ஜூஸ் வகைகள் விற்பனை அதிகரித்துள்ளது. கடைகளில் ஏசி மற்றம் ஃபிரிட்ஜ் விற்பனை சூடு பிடித்துள்ளது.

பகல் நேரத்தில் நகரில் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. நகரில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் மூலம் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

தற்போது அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ளதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசியது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் சாரல் மழை பெய்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்தது. ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மிதமாக பெய்த மழையினால் சில மணி நேரம் குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது, இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News