வருவாய்துறைஅதிகாரிகள் கிளப்பின் பல்வேறு அறை, மைதானம் சீல் வைப்பு

ஆட்சியர் பிரபுசங்கர், வருவாய் துறை அதிகாரிகளுடன் டென்னிஸ், இறகுபந்து, டேபிள் டென்னிஸ் அரங்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-12-29 11:30 GMT

சீல் வைக்கும் அதிகாரிகள்.

கரூர் நகரின் மையப் பகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் கடந்த 1944 ம் ஆண்டு தி ஆபிஸர்ஸ் கிளப் துவங்கப்பட்டது. இதில் டென்னிஸ், இறகு பந்து, கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டுகள் அதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் விளையாடி வந்தனர். இதில் பெரும் செல்வந்தர்களும், அரசு அலுவலர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை அதிகம் இருப்பதாலும், சட்டத்திற்கு புறம்பான சீட்டாட்டம், மது அருந்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் ஆபீஸர்ஸ் கிளப்பில் நடப்பதாக வந்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் திடீர் என வருவாய் துறை அதிகாரிகளுடன் டென்னிஸ் அரங்குகள், இறகு பந்து அரங்குகள், டேபிள் டென்னிஸ் போன்ற அரங்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிளப்பின் ஒரு பகுதியில் சீட்டாட்டம் நடத்தும் வகையில் டேபிள்கள் போடப்பட்டு இருந்தன. காலி மதுபான பாட்டில்கள், சிகரெட் துண்டுகள் அதிகளவில் கிடந்தன. இதனை அடுத்து உடனடியாக கிளப்பை சீல் வைக்க வருவாய்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் தலைமையில் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் கிளப்பின் பல பகுதிகளில் இருந்த பொருட்களை கணக்கெடுத்தனர். நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து எடுக்க வேண்டிய பொருட்களை எடுத்துக் கொள்ளச் செய்தனர். இதனை அடுத்து கிளப்பில் இருந்த பல்வேறு அறைகள், விளையாடு மைதான அரங்குகள் நுழைவு வாயில் கேட் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

Tags:    

Similar News