நெரூர் பகுதியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

நெரூர் பகுதியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

Update: 2022-03-07 10:30 GMT

காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் வடபாகம் பஞ்சாயத்து காவிரி ஆற்றினை ஒட்டிய பஞ்சாயத்து ஆகும். இங்கு கடந்த 15 நாட்களாக, குடிநீர் விநியோகம் இல்லை என்றும், மேலும் இரண்டு மாதங்களாக இதே தண்ணீர் பிரச்சினை நீடித்து வருவதாகவும் பொதுமக்கள் அவ்வப்போது குற்றச்சாட்டினர்.

இந்த நிலையில், இன்று பாதிக்கப்பட்ட மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெரூர் வடபாகம் பஞ்சாயத்து தலைவராக திமுகவைச் சார்ந்த செந்தாமரைச் செல்வி பதவி வகித்து வரும் நிலையில், அவரும் அவருடைய கணவர் ராஜேந்திரனும் பொதுமக்கள் தங்கள் குறைகளைக் கூறினால் மிரட்டுவதாகவும்., கேவலமாக பேசுவதாகவும்., பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.

மேலும் பஞ்சாயத்தில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் திறந்துவிடும் பணிக்கு முறையான ஆட்களை நியமித்து குடிநீர் வழங்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் போலீஸார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியலால் கரூர் -திருமுக்கூடலூர், திருமுக்கூடலூர் -கரூர் ஆகிய போக்குவரத்து சேவைகள் சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News