நல வாரியத்தில் 2 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டம்: ஆட்சியர்

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் 100 பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Update: 2021-12-02 05:15 GMT

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான உத்தரவுகளை வழங்கும் ஆட்சியர் பிரபு சங்கர்.

கரூர் மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் பிரபு சங்கர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் 100 பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான உத்தரவுகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது மட்டுமல்லாது, 1,197 நபர்களுக்கு கல்வி உள்ளிட்ட பிற உதவித் தொகையாக ரூ 30.03 லட்சம் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க 15 தனி நலவாரியங்கள் உருவாக்கியுள்ளது.

இதில், கருர் மாவட்டத்தில் 78,432 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், இன்றைய தேதி வரை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்கள் மூலமாக 10,161 நபர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது. மேற்கண்ட ஓய்வூதியம் தவிர திருமணம், கல்வி, மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் விபத்து ஊனம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் 94,376 பயனாளிகளுக்கு ரூ.40.81 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் 2 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான மாபெரும் இயக்கம் தொடங்க உள்ளது. ஒரு 3 மாத காலத்திற்குள் இந்த இலக்கை எய்திட மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேனி, சமுக பாதுகாப்பு தனித்துணை ஆட்சியர் சைபுதீன், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News