சட்டம் பெண்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பை உறுதி செய்கிறது: ஆட்சியர்

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், தடுப்பு விலக்கு தீர்வு சட்டம் 2013 குறித்த நிகழ்வு நடைபெற்றது

Update: 2021-12-09 17:00 GMT

நிகழ்வில்,  பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு  பதாகைகளுடன் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், தடுப்பு விலக்கு தீர்வு சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், கரூர் சட்ட பணிகள் ஆணைக் குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான மோகன்ராம் கலந்து கொண்டு பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேசுகையில், எது எல்லாம் விரும்பத்தகாத செயல்களோ, அது பாலியல் வன்கொடுமை. பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. சட்டம் பெண்களுக்கான 100 சதவீத  பாதுகாப்பை உறுதி செய்கிறது. அரசு மற்றும் தனியார் இடங்களுக்கு இந்த சட்டம் பொருந்தும்.

10 பெண்களுக்கு மேல் பணிபுரியும் இடங்களில் விசாக கமிட்டி அமைப்பது அவசியம். இச்சட்டத்தை பெண்கள் தங்களது பாதுகாப்புக்கான கேடயமாக பயன்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை வெளிக் கொண்டு வருவதில் உள்ள தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பேசினார். கூட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News