மாவட்ட ஹாஜி பதவிக்கான நேர்முகத்தேர்வு: தடுப்பூசி போட்டுக்கொண்ட விண்ணப்பதாரர்கள்

ஆட்சியர் பிரபு சங்கர் வேண்டுகோளை ஏற்று மாவட்ட காஜி பதவி நேர்முகத்தேர்வுக்கு வந்தவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்

Update: 2021-09-28 16:15 GMT

ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்ட காஜி பதவி நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்கள்.

கரூர் மாவட்ட ஹாஜி தேர்வுக்குழுக் கூட்டத்திற்கு வந்திருந்த உலமாக்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோளை ஏற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

கரூர் மாவட்டத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களின் பிரதிநிதியாக கருதப்படும், மாவட்ட ஹாஜி பொறுப்பு வகித்த என்.எ.அப்துல் ரஹீம் ரஷாதி என்பவர் இறந்துவிட்டதால், காலியாக உள்ள மாவட்ட ஹாஜி பதவியிடத்தை நிரப்பிடும் பொருட்டு, காஜி நியமன தேர்வுக்குழு மற்றும் காஜி பொறுப்பிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கரூர் மாவட்ட ஹாஜி பதவிக்கான நேர்முகத்தேர்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

 புதிய ஹாஜியை நியமனம் செய்வதற்காக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின் படி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை தேர்வுக் குழுத் தலைவராகவும், 5 உலமாக்கள் மற்றும் 2 முக்கிய பிரமுகர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட மாவட்ட அளவிலான ஹாஜி நியமன தேர்வுக் குழு ஏற்கனவே அமைக்கபட்டது.     கரூர் மாவட்ட ஹாஜி நியமனம் செய்ய மூன்று நபர்கள் கொண்ட தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலை, அரசுக்குப் பரிந்துரை செய்யும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில், தேர்வுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஹாஜி பதவிக்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு கூட்டத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் பேசுகையில்,  கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும், மூன்றாவது அலை பரவாமல் தடுப்பதற்கும் பேராயுதமாக விளங்கும் தடுப்பூசியினை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம்கள் மூன்று கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட முகாம்களின் அனுபவத்தில், சில இடங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களுக்கு தயக்கம் உள்ளது. சிலருக்கு நம்பிக்கை சார்ந்த விஷயங்களும், சிலருக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் இருக்கின்றது.

 கரூர் மாவட்டத்தின் இஸ்லாமியப்பெருமக்களில் முக்கிய நபர்கள், கல்வி கற்றறிந்த அறிஞர்கள், ஹாஜி பதவிக்கான விண்ணப்பதாரர்களும் மாவட்ட அளவிலான முக்கிய பிரமுகர்களும்  இங்கு வந்துள்ளனப். உங்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை செலுத்த வேண்டியவர்கள் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால், உங்களைப் பின்பற்றி, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும். நீங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் நம்பிக்கை சார்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், தவிர்க்க நினைக்கும் அனைவருக்கும் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கமுடியும்  உங்களுக்காக சிறப்பு மருத்துவக்குழுவினர் வருகை தந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உங்களுக்கு விடுக்கப்படுகின்ற வேண்டுகோளாக ஏற்று  தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் பிரபு சங்கர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து,  மாவட்ட ஆட்சித்தலைவரின் வேண்டுகோளை ஏற்று, வந்திருந்து உலமாக்கள் மற்றும் ஹாஜி பதவிக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் என தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

     

Tags:    

Similar News