பாரத ஸ்டேட் வங்கியில் அரசு துறை கணக்குகளை மூட ஆட்சியர் உத்தரவு

அரசு திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்காத எஸ்பிஐ வங்கியில் உள்ள அரசு துறை வங்கி கணக்குகளை மூட ஆட்சியர் உத்தரவு.

Update: 2021-09-24 12:45 GMT

கரூரில் வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பேசுகிறார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில், அரசுத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மாவட்ட வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் கூட்ட அரங்கில்  நடைபெற்றது. கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயனானிகளுக்கு கடனுதவி வழங்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும், எத்தனை பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது ? எத்தனை பேருக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது? அப்படி நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக ஒவ்வொரு வங்கி வாரியாக ஆய்வு மேற்கொண்டார்.

எஸ்.வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற மாற்றுத்திறனாளிக்கு தாட்கோவின் தொழில் முனைவோர் திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுவதாக காந்திகிராமம் பாரத எஸ்டேட் வங்கியின் மூலம் உறுதியளிக்கப்பட்டு, அதனடிப்படையில் தாட்கோ மூலம் அரசின் மானிய நிதியுதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு வருடம் கடந்தும் அந்த வங்கியின் மூலம் கடனுதவி வழங்கப்படவில்லை. இதனால், தாட்கோ மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியம் அரசிற்கு திரும்ப செலுத்தப்பட்டுவிட்டது.

மாற்றுத்திறனாளி என்றபோதும் ஒரு வருட காலம் முறையான காரணங்களை தெரிவிக்காமல் அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்தமால் வாடிக்கையாளர் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் "கல்விக்கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும் கல்விக்கடனுதவி வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வரப்பெற்றதாக  மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதுபோன்று, அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்தாததாலும், வாடிக்கையாளர்களை அலட்சியப்படுத்தி அலைக்கழித்ததாலும், கடந்த ஒரு வருடகாலமாக பல்வேறு அரசுத்துறைகளின் வங்கிக்கணக்குகளுக்கு முறையான வங்கி சேவைகள் வழங்கபடாததாலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு துறைகளின் சார்பின் பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் உள்ள வங்கிக்கணக்குகளை ரத்து செய்து, பிற பொதுத்துறை வங்கிகளுக்கு கணக்குகளை மாற்ற வேண்டும் என்று ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார்.

இனிவரும் காலங்களின் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் வங்கியாளர்கள் கூட்டத்திலும் ஆய்வு செய்யப்பட்டு அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்தாத வங்கிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் மாத நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் சுமார் 300க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் மூலம் சுமார் ரூ.50 கோடிக்கும் மேலான பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News