பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்

சட்டமன்றத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ளலாம் என அறிவித்ததையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிகள் தொடங்கியுள்ளது

Update: 2022-03-07 10:15 GMT

கரூர் நகரில் உள்ள  கனிமம் மற்றும் கண்காணிப்பு உட்கோட்டம் உதவி செயற் பொறியாளர் ஆலுவலகத்தை  முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் 

கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகள் பாய்கின்றது. இதில் கிடைக்கும் மணலை மாட்டு வண்டிகளில் அள்ளி உள்ளூரில் கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்து வந்தனர். கடந்த சிக ஆண்டுகளாக இந்த ஆறுகளில் மணல் அள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது. இதனால் இதனை நம்பியுள்ள சுமார் 3000க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களும், கால்நடைகளும் பாதிக்கப்பட்டன.

மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது அமைந்துள்ள திமுக அரசு, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்படும் என அறிவித்தது. இதையடுத்து தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் ஆறுகளில் மணல் அள்ள ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளது.  ஆனால், கரூர் மாவட்டத்தில் இது போன்ற எந்த பூர்வாங்க பணிகளும் நடைபெறவில்லை எனக் கூறி கரூர் நகரில் உள்ள பொது பணித்துறைக்கு சொந்தமான கனிமம் மற்றும் கண்காணிப்பு உட்கோட்டம் உதவி செயற் பொறியாளர் ஆலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் இது தொடர்பாக விளக்கங்களை கேட்டறிந்தனர். இன்னும் 15 நாள்களுக்குள்  அதற்கான பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு உள்ளூர் தேவைக்காக மாட்டு வண்டியில் மணல் அள்ள காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் மணல் குவாரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


Tags:    

Similar News