விநாயகர் சிலை சேதம்: காவல் ஆய்வாளரை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

கரூரில், விநாயகர் சிலையை சேதப்படுத்திய காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்யக்கோரி, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-10 05:30 GMT

கரூர் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

கரூரில், நேற்று முன்தினம் இரவு, பசுபதீஸ்வரர் கோயில் முன்பு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நான்கடி உயர விநாயகர் சிலை வைக்க முயற்சி நடந்தது.  போலீசார் அந்த சிலையை வைக்க விடாமல் தடுத்து, கைப்பற்றி சிலையை  ஈஸ்வரன் கோயில் வளாகத்தினுள் வைத்தனர்.

கரூர் நகரில் உள்ள வ.உ.சி. தெருவில் வைக்க முயன்ற ஒரு விநாயகர் சிலையையும் போலீசார் கைப்பற்றினர். அப்போது போலீசாருக்கும், இந்து முன்னணிக்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு விநாயகர் சிலை சேதம் அடைந்தது. இதை கண்டித்த பாஜகவினர் , நகர காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் சிலையை வைத்து சேதப்படுத்தியதாக கூறி,   கண்டித்தனர்.

இதையடுத்து,  இன்று கரூர் நகர காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியனை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், கரூர் பேருந்து நிலையம் முன்பு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் , இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, துறைரீதியான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உறுதி அளித்தார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News