வேளாளர் பெயர் மாற்ற விவகாரம்: போராட்டத்தில் மயக்கம்

வேளாளர் பெயர் மாற்ற விவகாரம்: சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தலைவர் கார்வேந்தன் மயக்கமடைந்து விழுந்தார்.

Update: 2021-02-18 17:11 GMT

40 உட்பிரிவுகளை கொண்ட வேளாளர் பெயரை தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்யும் முயற்சியை திரும்பப் பெற வலியுறுத்தினார் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தலைவர் கார்வேந்தன். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கரூரில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் திடீரென மயக்கமுற்றார்.

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள ஏழு சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்யும் மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், பல்வேறு வேளாளர் சமுதாயங்களை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்வதற்கு தமிழகத்தில் உள்ள வேளாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், கரூரில் அனைத்து வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கொங்கு வேளாளர், சோழிய வேளாளர் உட்பட 40 உட்பிரிவுகளைக் கொண்ட வேளாளர் பெயரை வேறு சில சாதிகளின் சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்யும் மத்திய மாநில அரசுகள் முயற்சியை திரும்பப் பெற வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 15 ம் தேதி தொடங்கி நடத்தி வந்தனர்.

கரூரில் கூட்டமைப்புக்கு சொந்தமான இடத்தில் இந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி, பெயர் மாற்ற முயற்சியை கைவிடும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். தனியார் இடத்தில் உண்ணாவிரதத்தை நடத்தியதால், போலீசார் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 3 ம் நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தலைவர் கார்வேந்தன் திடீரென மயக்கமுற்றார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மயக்கமுற்ற கார்வேந்தனை உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News