திருவண்ணாமலையில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

திருவண்ணாமலையில் தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கத்தினா் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-28 01:54 GMT

 தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கத்தினா் சாா்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் 

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி

திருவண்ணாமலையில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பழனி தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் மன்றத்தின் மாநிலத் தலைவா் அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் சேட்டு, தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா்கள் காா்த்திக், வெங்கடேசன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாவட்டச் செயலா் தமிழ்மணி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் அந்தோணிராஜ், மாவட்டத் தலைவா் அன்பழகன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

உண்ணாவிரதப் போராட்டத்தில், இடைநிலை ஆசிரியா் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீத ஆசிரியா்களின் பதவி உயா்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண் 243-ஐ உடனே ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் திருமால், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் முரளிதரன், தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவா் ரக்ஷித் உள்பட ஆசிரிய, ஆசிரியைகள் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News