திருவண்ணாமலையில் வெளிநாட்டவரை தங்க வைக்க முறையான அனுமதி பெற போலீஸ் அறிவுறுத்தல்

திருவண்ணாமலையில் வெளிநாட்டவரை தங்க வைக்க முறையான அனுமதி பெற வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-06-12 01:36 GMT

திருவண்ணாமலையில் வெளிநாட்டினரை தங்க வைக்க போலீஸ் அனுமதி பெற வேண்டும். (பைல் படம்)

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

உலக பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக கருதக் கூடியதுமான அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரையாக திருவண்ணாமலை நோக்கி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாதந்தோறும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வருகை புரிகின்றனர்.

அவ்வாறு வரும் வெளிநாட்டினர் ஆன்மீகத்தை நாடியும் அமைதியை வேண்டி திருவண்ணாமலைக்கு வருகின்றனர்.

அவ்வாறு வரும் வெளிநாட்டினர் திருவண்ணாமலையில் தங்குவதற்கு அனுமதி பெற்ற C.FORM பயனாளர் அடையாள எண் உடைய ஆசிரமங்கள், தங்கும் விடுதிகள் தங்குவதற்கு இடமளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீப காலங்களில் திருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டினர் பலர் கிரிவலப் பாதையில் உள்ள வீடுகளில் மற்றும் தங்கும் விடுதிகள் அல்லது ஆசிரமங்கள் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையிடம் முறையான தகவல்கள் அனுமதி பெறாமல் வாடகைக்கு தங்கி வருவதாக காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளது.

குறிப்பாக திருவண்ணாமலை நகர பகுதியில் மற்றும் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ள வீடு மற்றும் விடுதி ஆசிரமங்கள் தங்களது குடியிருப்புகளில் அனுமதி பெறாமல் போதிய பாதுகாப்பின்றியும் வெளிநாட்டவர்களை தங்க வைத்து வருகின்றனர்.

இதனால் வெளிநாட்டவர் எங்கே தங்கியுள்ளனர் என்பது குறித்த சரியான தகவல் தெரியாமல் போவதால் அவர்களின் விசா நீடிப்பு, விசா மாற்றம், இதர சேவையை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் வெளிநாட்டவர்களை தங்குவதற்கு அனுமதி அளித்த 24 மணி நேரத்தில் அந்த நபர் குறித்த அடிப்படை விரவங்களை ஆன்லைன் மூலம் C-FORM-ஆக பதிவுசெய்ய வேண்டும். C-FORM தகவல் இல்லாமலோ அல்லது வேறு முகவரியில் எடுத்த C-FORM வைத்தோ வெளிநாட்டவர்களுக்கு தங்க இடமளித்தால், சம்பந்தப்பட்ட தங்குமிடத்தின் உரிமையாளர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனமாவட்ட காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

எனவே, வெளிநாட்டவரை தங்களது வீடு. தங்கும் விடுதி, ஆசிரமம். மருத்துவமனை, பள்ளி அல்லது கல்லூரி போன்ற வளாகங்களில் தங்க வைப்பதற்க்காக பிரத்யேக இணையதள முகவரியின் பயனாளர் அடையாள எண் மற்றும் அதற்க்கான வழிமுறைகள் திருவண்ணாமலை மாவட்டக் காவல் அலுவலகத்தில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அவ்வாறு பயனாளர் அடையாள எண் பெறாத விடுதிகள் ஆசிரமங்கள் வீடுகளில் வெளிநாட்டவரை தங்க வைத்தது தெரிய வந்தால் விடுதி வீட்டில் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அடுத்த பண்டிக்கப்பட்டு கிராமத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒருவர் அவர் தங்கியிருந்த வீட்டில் அறைக்குள் உயிரிழந்து இருந்தார். கதவை உடைத்து அவரது உடலை போலீசார் மீட்டனர்.

இதனை அடுத்து திருவண்ணாமலையில் வெளிநாட்டவர்களை உரிய அனுமதி பெற்ற பிறகு தங்க வைக்க வேண்டும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமங்கள், விடுதிகள் ,போலீசார் அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

Similar News