நாளை பள்ளிகள் திறப்பு: மாணவர்களை வரவேற்க வாழைமரம், தோரணம் கட்டி அசத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கவுள்ளதால், மாணவர்களை வரவேற்க அரசு பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.

Update: 2021-10-31 13:00 GMT

புதுச்சத்திரம் ஒன்றியம், கண்ணூர்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை வரவேற்க பள்ளியில் வாழை மரம் மற்றும் தோரணம் கட்டி அலங்காரம் செய்து வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த சுமார் 18 மாதங்களாக கொரோனா ஊரடங்கால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், கல்வித்தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்களைப் படித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டது. தற்போது மேலும் தளர்வுகள் அளித்து, நாளை நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களை பள்ளிக்கு அனுப்பக்கோரி பல இடங்களில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பத்தினார்கள்.

ஒரு சில இடங்களில் அரசுப் பள்ளி சுவர்களுக்கு வர்ணம் பூசி, அலங்கார தோரணங்கள் மற்றும் வாழை மரங்கள் கட்டி மாணவ மாணவிகளை வரவேற்க தயார் செய்துள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்ல தயாராகவுள்ளனர்.

Tags:    

Similar News