விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை ஆண்டு சிறை..!

விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2024-05-24 15:15 GMT

ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம்.

நாமக்கல்:

விவசாயி மீது பொய் வழக்குப் பதிவு செய்த, வெண்ணந்தூர் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2,500 அபராதம் விதித்து நாமக்கல் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள வெண்ணந்தூர் கொழிஞ்சித் தோட்டத்தை சேர்ந்தவர் பழனியப்பன், இவரது மகன் வேலு (50), விவசாயி. இவருக்கும், அவரது பெரியப்பா குடும்பத்தினருக்கும் இடையே நிலம் சம்மந்தமாக பிரச்சினை இருந்து வந்தது. இது குறித்து வேலுவின் தந்தை பழனியப்பன் கடந்த 1991 ஆம் ஆண்டு, ராசிபுரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் 2001ம் ஆண்டு பழனியப்பனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இந்த நிலையில் இரண்டு கும்பத்தாருக்கும் மீண்டும், நிலம் சம்மந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, வேலுவின் பெரியப்பா மகன் சவுந்தரராஜன் என்பவர், வேலு மீது வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், அப்போது வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சுப்பிரமணியன், வேலுவை அழைத்து விசாரணை என்ற பெயரில், தகாத வார்த்தைகளால் திட்டி, லத்தியால் அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வேலு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த வேலு வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தன்னை கைது செய்த போது தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அச்சுறுத்தி ரூ. 5,500 பணமும் பெற்றுக் கொண்டு லத்தியால் தாக்கியதாக மனித உரிமை ஆணையத்திலும், காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் புகார் செய்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வேலு, ராசிபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவில் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி, ராசிபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சுப்பிரமணியத்துக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2,500 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் மேல் முறையிட்டு வழக்கினை விசாரித்த நாமக்கல் தாழ்த்தப்பட்டோருக்கான வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அதில் ராசிபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட் விதித்த சிறை தண்டனை மற்றும் அபராத தொகையை உறுதி செய்து போலீஸ் இன்ஸ்பெக்டரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. கோர்ட்டில் தண்டனை பெற்றுள்ள, ஒய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம், ஏற்கனவே வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர் என்பதும், அதில் தண்டனை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News