நாமக்கல் மாவட்ட ரேஷன் கடைகளில் கூட்டுறவு துறை அதிகாரிகள் திடீர் சோதனை

நாமக்கல் மாவட்ட ரேஷன் கடைகளில் கூட்டுறவு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

Update: 2024-05-26 09:50 GMT

நியாயவிலைக்கடை (கோப்பு படம்).

நாமக்கல் மாவட்டத்தில் 912 ரேஷன் கடைகளை மேம்படுத்த, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் 35,296 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் மூலம் மாதம்தோறும், 2.20 கோடி ரேஷன் கார்டுகளுக்கு சர்க்கரை, அரிசி, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. பல இடங்களில் ரேஷன் கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படுவதில்லை, கடைகளுக்கு அடிக்கடி விடுமுறை விடப்படுகின்றன, அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்படுவதில்லை, பல பொருட்கள் தரமற்ற நிலையில் உள்ளன போன்ற புகார்கள் எழுந்தன. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில், தமிழக உணவுத்துறை மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால் உத்தரவின்பேரில், கூட்டுறவுத் துறை, உணவு வழங்கல் துறை, டிஎன்சிஎஸ்சி ஆகிய துறைகளை அதிகாரிக்களைக் கொண்ட குழுவினர் ஒரு நாள் முழுவதும் பல்வேறு ரேசன் கடைகளை திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது கடை விற்பனையாளர்களின் விவரம், கடை திறக்கப்படும் நேரம், கடையினுள் வெளிநபர்கள் நடமாட்டம், பொருட்கள் விற்பனை விலை, பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண், பொருட்கள் இருப்பு பட்டியல், மக்களுக்கான குடிநீர் வசதி, கடையின் ஸ்திரத்தன்மை, சுகாதாரம், மின்சார பயன்பாடு, எடை இயந்திரம், கைவிரல் ரேகை பதிவு கருவி உள்ளிட்ட 38 வகையான கேள்விகளுக்கான விடைகளை, அதற்கான படிவத்தில் பதிவு செய்ய்பட்டது. இந்த விபரங்கள் கூடுதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 912 ரேஷன் கடைகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில் வழங்கல் அலுவலகத்துக்கு உட்பட்ட தலா 15 ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வுப் பணியை மேற்கொண்டனர்.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் குறித்த புகார்கள் அதிக அளவில் வருவதால் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ள, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், ஒவ்வொரு ரேஷன் கடையிலும் 5 அலுவலர்கள் கொண்ட குழுவினர் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டோம். இந்த திடீர் ஆய்வு ரகசியமானதாகும். ரேஷன் கடைகளை மேம்படுத்துவதற்கும், புகார்களை களைவதற்கும் இந்த ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில், 29 அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஒரே நாளில் 169 ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில், 114 கடைகளில் குறைகள் கண்டறியப்பட்டு விளக்கம் அளிக்கக் கோரி விற்பனையாளர்களுக்கு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. பொருட்கள் இருப்பு குறைவு தொடர்பாக, கூட்டுறவு மற்றும் வழங்கல் துறை அதிகாரிகளால் ரேசன் கடை பணியாளர்களுக்கு மொத்தம் ரூ. 18,725 அபராதமாக விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News