நாமக்கல் டயர் கடை மேனேஜர் வீட்டில் ரூ. 6 லட்சம் நகை, பணம் திருட்டு

நாமக்கல் டயர் கடை மேனேஜர் வீட்டில் ரூ. 6 லட்சம் நகை, பணம் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2024-05-26 10:11 GMT

கொள்ளை நடந்த வீட்டில் சிதறி கிடந்த பொருட்கள்.

நாமக்கல்லில் டயர் கடை மேலாளர் வீட்டில், பீரோவை உடைத்து கொள்ளையர்கள் நகையை திருடிச் சென்றுள்ளனர்.

டயர் கடை மேனேஜர் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 9 பவுன் தங்க நகை உள்ளிட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.

நாமக்கல், திருச்சி ரோட்டில் உள்ள பொன்விழா நகரை சேர்ந்தவர் லோகசெந்தூர்முருகன் (வயது38), தனியார் டயர் கடையில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி திவ்யா (35). அவர், தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த, 22ம் தேதி, லோகசெந்தூர் முருகன் அலுவலக வேலையாக சென்னை சென்றுவிட்டார். அவரது மனைவி திவ்யா, தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு, கரூரில் உள்ள தயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், இன்று காலை, 6.30 மணிக்கு, லோகசெந்தூர்முருகன் சென்னையில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, துணி, மணிகள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகை, மற்றும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1.25 லட்சம் ரொக்கம் மேலும், லேப்டாப் ஒன்றும் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு, குற்றவாளிகளின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவுகளைக் கொண்டு, போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News