அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராகி பயனடைய நாமக்கல் ஆட்சியர் வேண்டுகோள்

அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராகி பயனடைய நாமக்கல் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-05-24 11:43 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.

வேலைவாய்ப்பு, கல்வி, வியாபாரத்திற்காக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழர்கள், அயலகத்தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராகி நலத்திட்ட உதவிகளைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வியாபாரத்திற்காக வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று வாழும் தமிழர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் உத்தரவின்படி “அயலகத் தமிழர் நல வாரியம்“ அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாரியம் மூலம் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

18 முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள், அயலகத் தமிழர் நலத்துறையின் வெப்சைட்டில் ((https://nrtamils.tn.gov.in)) ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.200 செலுத்தி, இரண்டு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையினை பெறலாம். இந்த அடையாள அட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். அயலகத் தமிழர் (வெளிநாடு) : இந்திய பாஸ்போர்ட் மற்றும் தகுந்த ஆவணங்களுடன் அயல்நாடுகளில் பணிபுரியும் மற்றும் கல்வி பயிலும் தமிழர்கள் மற்றும் எமிக்ரேஷன் கிளியரன்ஸ் பெற்றுஅயல்நாடு செல்ல உள்ள தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராகலாம்.

6 மாதத்திற்கு மேல் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் வெளிமாநில அயலகத் தமிழர் வெளிமாநில பிரிவில் உறுப்பினராகலம். உறுப்பினர் பதிவை ஊக்குவிக்கும் வகையில் 15.05.2024 முதல் 15.08.2024 வரையிலான 3 மாதங்களில் பதிவு செய்யும் நபர்களுக்கு பதிவு கட்டணம் ரூ.200 செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு பெற்ற நபர்கள், வாரியத்தின் மூலம் விபத்து இன்சூரன்ஸ், பல்வேறு நோய்களுக்கான மருத்துவ இன்சூரன்ஸ் போன்றவற்றை மிக குறைந்த பதிவு கட்டணம் செலுத்தி தேர்வு செய்துகொள்ளலாம்.

கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அயல்நாடுகளுக்கு வேலைக்காக சென்று உறுப்பினராக உள்ள தமிழர் இறக்கும் நிலையில் அவர்களின் குடும்பத்திலுள்ள மகன், மகளுக்கு (அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு) அவர்களின் கல்வி நிலைக்கேற்ப கல்வி உதவித் தொகை வழங்கப்படும். திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ், அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று உறுப்பினராக உள்ள தமிழர் இறக்கும் நிலையில் அவர்களின் குடும்பத்திலுள்ள திருமண வயது பூர்த்தியடைந்த மகன், மகளுக்கு (அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு) திருமண உதவித்தொகையாக ரூ.20,000 வீதம் வழங்கப்படும்.

அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக பழங்குடியின பிரிவினர் குறைந்த பட்சம் 5ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பிற பிரிவினர் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இத்திட்டம் குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்துகொண்டு, உறுப்பினராகிட கட்டணமில்லா உதவி எண்: 18003093793 (இந்தியாவிற்குள்), 8069009901 (அயல்நாடுகளிலிருந்து தொடர்புக்கு) ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 8069009900 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தும் விபரங்கள் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News